பீகாரில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், ஒற்றைக்காலிலேயே 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு சென்று பயின்று வருகிறார். இவர் தற்போது அரசு உதவி கோரியுள்ளார்.
சிவான் பகுதியைச் சேர்ந்த மாணவி பிரியன்சு குமாரிக்கு பிறவியிலேயே இடது காலில் குறை இருந்தது. பெற்றோரின் ஊக்கத்தால், ஒற்றைக்காலிலேயே துள்ளித்துள்ளி குதித்தபடியே நடக்கப் பழகி உள்ளார் இவர். 11 வயதான பிரியன்சு குமாரிக்கு, மருத்துவராகி சேவை புரிவதே லட்சியம் என்கிறார்.
தனது உடற்குறையைப் போக்க பீகார் மாநில அரசும் மத்திய அரசும் உதவாததால், தினமும் 2 கிலோ மீட்டர் தூரத்தை ஒற்றைக்காலிலேயே கடந்து பள்ளி செல்கிறார். இதைத்தொடர்ந்து தனக்கு செயற்கைக்கால் வழங்குமாறு அரசாங்கத்திடம் பிரியன்சு குமாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “பிறந்ததிலிருந்தே நான் இப்படித்தான் இருக்கிறேன். அதற்காக என் கனவுகளை அடையாமல் விடமாட்டேன். என் கனவை நோக்கி நான் செல்ல, எனக்கு செயற்கை காலொன்று தேவைப்படுகின்றது. அரசு அதற்கு உதவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.