லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரியங்கா காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரி கேரியில் நடந்த வன்முறையில் விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே அஜய் மிஸ்ராவை மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று மவுன விரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சூழலில் உயிரிழந்த 4 விவசாயிகளுக்கு வன்முறை நடந்த இடத்திற்கு அருகில் திகோனியா கிராமத்தில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரியங்கா காந்தி இன்று காலை லக்னோ வந்தடைந்தார். அங்கிருந்து காரில் லக்கிம்பூர் செல்லும் வழியில் பிரியங்கா காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.