ராகுல், பிரியங்கா ட்விட்டர்
இந்தியா

வயநாடு தொகுதியை ராஜினாமா செய்கிறார் ராகுல்.. களமிறங்குகிறார் பிரியங்கா காந்தி!

கேரளாவின் வயநாடு தொகுதியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ராஜினாமா செய்துள்ளார்.

Prakash J

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் பலம் கிடைக்கவில்லை. என்றாலும், பாஜக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இதன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அவர், காங்கிரஸின் கோட்டையான உத்தரப்பிரதேசத்தின் ராய் பரேலியிலும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி

இதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்று ராகுல் காந்தி அசத்தினார். வயநாடு தொகுதியில் ராகுல் 6,47,445 வாக்குகளைப் பெற்று 3,64,422 ஓட்டு வித்தியாசத்தில் அன்னி ராஜாவை தோற்கடித்தார். அதுபோல், உபியில் உள்ள ராய் பரேலி தொகுதியில் ராகுல் 6,87,649 வாக்குகளைப் பெற்று பாஜக வேட்பாளரை 3,90,030 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தொடரும் சம்பவங்கள்| உணவில் பிளேடு.. உறுதிசெய்து இழப்பீடு வழங்கிய ஏர் இந்தியா.. நிராகரித்த பயணி!

இதனையடுத்து இரு தொகுதிகளில் ஒன்றின் எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தாக வேண்டும். அதாவது 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர், 14 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதி எம்பி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதி. இதனடிப்படையில் ராகுல் காந்தி, இன்று வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். மேலும், அந்தத் தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில், ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி களமிறங்குவார் எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல், பிரியங்கா

கடந்த 2019ஆம் ஆண்டு வயநாடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, அதே ஆண்டில் காங்கிரஸின் கோட்டையான அமேதியிலும் நின்றார். ஆனால், அங்கே ஸ்மிருதி இரானியிடம் அவர் தோல்வியைத் தழுவினார். இதையடுத்து, வயநாடு தொகுதி எம்பியாகப் பதவி வகித்தார். இந்த முறையும் வயநாட்டில் இறங்கிய அவர், அமேதியில் களம் காண காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியும் அவர் களமிறங்கவில்லை. இதற்கிடையேதான், இன்னொரு காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் ராய் பரேலி தொகுதியின் எம்பி ஆக இருந்த சோனியா காந்தி ராஜ்சபா உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, அந்தத் தொகுதியில் ராகுல் களமிறக்கப்பட்டார். தற்போது இந்த தொகுதியின் எம்பியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இதையும் படிக்க: “நீதி வேறு,நட்பு வேறு; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கணும்”-தர்ஷன் வழக்கில் டாப் நடிகர் கருத்து

"அரசியலில் இறங்குவது எனக்கு எந்த பதற்றமும் இல்லை" - பிரியங்கா காந்தி

“வயநாடு மக்களுக்கு என் நன்றிகள்; வயநாட்டிற்கு தொடர்ந்து செல்வேன். கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவு, அன்பு என்றும் மறக்க முடியாது. நான் எப்போதும் வயநாடு மக்களுக்காக நிற்பேன். பிரியங்கா காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார். வயநாடு மக்களுக்கு நான் & என் சகோதரி என பிரதிநிதிகள் இருக்க போகிறோம்” என்று ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

‘வயநாட்டில் போட்டி இடுவது மிகுந்த மகிழ்ச்சி; வாக்கு அரசியலில் இறங்குவது எனக்கு எந்த பதற்றமும் இல்லை’ என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.