பிரியங்கா காந்தி வேட்புமனுத் தாக்கல் pt web
இந்தியா

தொண்டர்கள் புடைசூழ பேரணி.. வயநாடு தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி..!

காங்கிரஸ் வேட்பாளரான பிரியங்கா காந்தி இன்று பேரணியாகச் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது, அவரது கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் அவரது தாய் சோனியா காந்தி உடனிருந்தனர்.

Angeshwar G

வயநாடு மக்களவைத் தொகுதி

கேரள மாநிலம் வயநாட்டில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு என இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தார். தொடர்ந்து வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து வயநாடு மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் நவம்பர் 13 ஆம் தேதி அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் சிபிஐ சார்பில் சத்யன் மோகேரியும் களம் காண்கின்றனர்.

நவ்யா ஹரிதாஸ், பாஜக

காங்கிரஸ் வேட்பாளரான பிரியங்கா காந்தி இன்று பேரணியாகச் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது, அவரது கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் அவரது தாய் சோனியா காந்தி உடனிருந்தனர்.

முன்னதாக கல்பெட்டா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் பேரணி சென்றார் பிரியங்கா. இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கில் மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும், கூட்டணி கட்சியினரும் கலந்துகொண்டனர்.

முதல்முறையாக எனக்கான பரப்புரை

பேரணிக்கு இடையே பரப்புரைக் கூட்டத்தில் பேசிய வேட்பாளர் பிரியங்கா காந்தி, “17 வயதில் எனது தந்தைக்காக வாக்கு சேகரித்துள்ளேன். 35 ஆண்டுகளாக பலமுறை கட்சி நிர்வாகிகளுக்காக பரப்புரை செய்துள்ளேன். முதன்முறையாக இப்போது எனக்காக பரப்புரை செய்கிறேன். தேர்தலில் பரப்புரை செய்வதும், இப்போது உங்களது ஆதரவை நான் தேடுவதும் மிகவும் வித்தியாசமான உணர்வு. நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனது மரியாதை.

சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட அழிவை என் கண்களால் பார்த்தேன். குடும்பத்தை இழந்த குழந்தைகளைப் பார்த்தேன். குழந்தைகளை இழந்த தாய்களைப் பார்த்தேன். தனது வாழ்வையே இழந்த மக்களைப் பார்த்தேன். ஆனால், ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் உதவுவதில் ஈடுபட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் துணிச்சலுடன் ஆதரித்தனர். உங்களது சமூகத்தின் பிரதிநிதியாக இருப்பது எனக்கு மிகப்பெரிய பாக்கியமாக இருக்கும்” என தெரிவித்தார்.

பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “என் சகோதரி பிரியங்கா காந்திதான் எனக்கு இன்னொரு தாயாக இருக்கிறார். என்னை ஏற்றுக்கொண்டதைப் போல் பிரியங்காவையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வயநாட்டிற்கு நான் எப்போது வேண்டுமானாலும், சொந்த வீட்டுக்கு வருவதைப் போல் வருவேன்” என தெரிவித்தார்.