மோடி, பிரியங்கா காந்தி ட்விட்டர்
இந்தியா

மாங்கல்யம் சர்ச்சை பேச்சு| பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி!

பிரதமர் மோடியின் மாங்கல்யம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு, பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

Prakash J

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துவருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மிச்சமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸும், பாஜகவும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், இன்று கர்நாடாகவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு இருந்தது. உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா? என் பாட்டி தனது தாலியைப் போருக்காகக் கொடுத்தார். என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். உண்மை என்னவெனில், இவர்களால் (பாஜக) பெண்களின் போராட்டத்தைப் புரிந்துகொள்ள முடியாது. 'மங்கள்சூத்திரத்தின்' முக்கியத்துவத்தை மோடிஜி புரிந்துகொண்டிருந்தால், இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார்” என தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்தார்.

இதையும் படிக்க: முக்கியத் தகவல்கள் மறைப்பு| அதானி குழுமத்தில் விதிமுறைகளை மீறி முதலீடு.. கண்டுபிடித்த செபி!

முன்னதாக ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்ட மோடி,“காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது,​​ தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன்பொருள், அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. அப்படியென்றால், உங்கள் வளங்கள் யாருக்குப் போகப்போகிறது. இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக்கூட விட்டுவைக்காது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மோடியின் இந்தக் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்ததுடன் தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

இதையும் படிக்க: மன்னிப்பு விளம்பரம்: மீண்டும் மீண்டும் ’குட்டு’ வாங்கும் பதஞ்சலி.. கண்டித்த உச்ச நீதிமன்றம்!