இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், கடந்த மே மாதத்தில் தனியார் மருத்துவமனைகளில் 17 சதவிகித தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், பயன்படுத்தப்படாத பெரும்பங்கு தடுப்பூசிகள் அங்கு இருப்பதாகவும் தரவுகள் வெளியாகியுள்ளன.
கடந்த 4-ம் தேதி மத்திய சுகாதாரம் வெளியிட்ட அறிக்கையில், மே மாதத்தில் இந்தியாவில் 7.4 கோடி தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டதாவும், அதில் 1.85 கோடி தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்து.
அதன்படி, 1.29 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்திருந்த தனியார் மருத்துவமனைகள், அவற்றில் 22 லட்ச தடுப்பூசிகளை மட்டுமே அவை பயன்படுத்தியிருப்பதாக அரசு தற்போது தெரிவித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில், கொள்முதல் விலையும் சேர்த்து, கூடுதல் விலைக்கு தடுப்பூசி போடப்படுவதால் அங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என கணிக்கப்பட்டுள்ளது.
விலை ரீதியான இந்த ஏற்றத்தாழ்வை தடுக்க, இம்மாத தொடக்கத்தில் அரசு தடுப்பூசி மீதான விலை நிர்ணயத்துக்கு உச்சவரம்பை நிர்ணயித்து முறைபடுத்தியிருந்தது. அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசிக்கான ஒரு டோஸ் விலை 780 ரூபாய் என்றும்; ஸ்புட்னிக் வி ஒரு டோஸ் 1,145 ரூபாய் என்றும்; கோவேக்சின் தடுப்பூசி 1,410 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொகையில் வரி மற்றும் 150 ரூபாய் மருத்துவமனை சேவை கட்டணமும் அடங்கும்.
“25 சதவிகித தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கியிருப்பதாகவும், அதில் 7.5 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் சில செய்திகள் சொல்கின்றன. ஆனால் அந்த தரவுகள் உண்மையல்ல” என மத்திய அரசு கூறியுள்ளது.