இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கள்ளநோட்டுகள் புழக்கத்தை தடுக்க உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதை வரவேற்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபகாலமாக 2 ஆயிரம் ரூபாய் தாள்களின் புழக்கம் குறைந்திருப்பதற்கான காரணம் குறித்து ‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் தகவல் கேட்டு விண்ணப்பித்திருந்தது. அதற்கு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.
மேலும், கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து, அந்த நிதியாண்டில் சுமார் 354 கோடி எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அச்சிடுவது படிப்படியாக குறைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2017-18-ஆம் நிதியாண்டில் சுமார் 11 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் தாள்களும், கடந்த நிதியாண்டில் 4 கோடி எண்ணிக்கையிலான ரூபாய் தாள் மட்டுமே அச்சிட்டதாக தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒரு 2 ஆயிரம் ரூபாய் தாள் கூட அச்சிடப்படவில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. உயர்மதிப்பு ரூபாய் தாள்களை திடீரென செல்லாது என அறிவிக்காமல், படிப்படியாக புழக்கத்தை குறைப்பதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.