உ.பி முகநூல்
இந்தியா

உ.பி:கட்டணம் செலுத்தாததால் கொளுத்தும் வெயிலில் உட்கார வைக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்

உத்தரப்பிரதேசத்தில் பள்ளிக் கட்டணம் நிலுவையில் இருந்ததால் அப்பள்ளியில் படிக்கும் 50 மாணவர்களை கொளுத்தும் வெயிலில் அப்பள்ளியின் முதல்வர் உட்கார வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்கட்டணம் நிலுவையில் இருந்ததால் அப்பள்ளியில் படிக்கும் 50 மாணவர்களை கொளுத்தும் வெயிலில் அப்பள்ளியின் முதல்வர் உட்கார வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், இதுகுறித்தான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், சித்தார்த்நகரில் அமைந்துள்ள ஷியாம்ராஜி உயர்நிலைப்பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இப்பள்ளியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கட்டணம் கட்டாமல் நிலுவையில் வைத்திருந்ததால், அவர்களை அப்பள்ளியின் முதல்வர் கொளுத்தும் வெயிலில் அமர்த்தியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அம்மாவட்ட ஆய்வாளர் கவனத்திற்கு சென்றது. இது குறித்து தெரிவித்த அவர், “ இப்படி செய்வது மிகவும் வெட்கக்கேடானது. இது குறித்த தகுந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாணவர்களை வெயிலில் அமர வைத்த அப்பள்ளியின் முதல்வர், ஷைலேஷ் குமார் தெரிவிக்கையில், “கட்டணத்தை கட்டாததால் அதை கட்டும்படி பெற்றோரை கண்டிக்கும் வகையிலும், எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கத்தான் இதை செய்தேன்.

ஒரு மாணவருக்கு ரூ.10,000 முதல் லட்சங்கள் வரை கட்டணம் நிலுவையில் இருந்ததால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், வங்கியின் அழுத்தம் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் எனக்கு இதை தவிர வேறு வழியில்லாமல் போனது. ” என்றார். இதனால், ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருப்பின் மன்னிப்பு கேட்டுக்கொள்ளவதாகவும் தெரிவித்துள்ளார்.