இந்தியா

உங்கள் மகன் பப்ஜி விளையாடுகிறானா ? அரங்கத்தை வியப்பில் ஆழ்த்திய பிரதமர் மோடி

உங்கள் மகன் பப்ஜி விளையாடுகிறானா ? அரங்கத்தை வியப்பில் ஆழ்த்திய பிரதமர் மோடி

webteam

பப்ஜி விளையாட்டு குறித்து பிரதமர் மோடி அளித்த பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

இன்றைய தேதிக்கு கையில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களை பார்ப்பதே கஷ்டம் என்றுக்கூட சொல்லலாம். வயது வித்தியாசமின்றி அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். போன் என்றாலே தகவல் பரிமாற்றம் தான். ஆனால் அதைத் தாண்டி சமூகவலைதளங்கள், ஆன்லைன் கேம்கள் என எங்கெங்கோ பயணித்துக்கொண்டு இருக்கிறது ஸ்மார்ட் போன் உலகம்.

விளையாட்டு பிரியர்களை கவனத்தில் கொண்டு தினம் தினம் புதிது புதிதாக கேம்கள் களம் இறக்கப்படுகின்றன. அப்படியாக இப்போதைய ட்ரெண்டிங் கேம் பப்ஜி.பள்ளி சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை எங்கு இருக்கிறோம் என்பதை மறந்து இந்த பப்ஜி கேமை விளையாடி வருகிறார்கள். 

இந்நிலையில் பிரபலமான பப்ஜி விளையாட்டு குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் பிரதமர் மோடி உரையாடியது பேசுபொருளாகியுள்ளது. தேர்வுகளை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, நேற்று டெல்லியில் நடைபெற்ற  PARIKSHA PE CHARCHA 2.0 என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பெற்றோர் மற்றும் மாணவர்களுடன் உரையாடினார். 

இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அப்போது, ஒரு பெண்மணி, பிரதமரிடம், என் மகன் நீண்ட நேரம் ஆன்லைனில் கேம்கள் விளையாடிக் கொண்டிருக்கிறான். அதனால் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை இதற்கு என்ன செய்யலாம்? எனக் கேட்டார்.

அதற்கு உடனடியாக பதிலளித்த பிரதமர் மோடி, உங்கள் மகன் பப்ஜி விளையாடுகிறானா? எனக் கேட்டதும் அரங்கம் முழுக்க சிரிப்பொலி எழுந்தது.‌ தொடர்ந்து பேசிய மோடி, தொழில்நுட்பங்களிலிருந்து குழந்தைகளை தள்ளி வைப்பதன் மூலம் அவர்களை இந்த உலகத்திலிருந்தே தள்ளி வைக்கிறோம். எனவே உங்கள் குழந்தைகள் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்து அவர்களுடன் உரையாடுங்கள் என அறிவுறுத்தினார்.