இந்தியா

'உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்'- ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

'உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்'- ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

JustinDurai

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் அமைதியான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையே எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் இருப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் கூறி வந்த நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் மிக ஆக்ரோஷமான போரை தொடங்கியிருக்கிறது ரஷ்யா. முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததால், செய்வதறியாமல் திகைக்கின்றனர் உக்ரைன் மக்கள். ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய முயன்று வருகின்னர். இந்தச் சூழலில், போரை முடிவுக்கு கொண்டு வந்து தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற இந்தியா முன் வரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது உக்ரைன். பிரதமர் நரேந்திர மோடி போன்ற வெகு சில உலக நாடுகளின் தலைவர்கள் மீது மட்டுமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார் என்றும், எனவே, பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலிகா கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அமைதியான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைகள் நடத்துவதால் மட்டுமே ரஷ்யா, நேட்டோ இடையே ஏற்பட்டிருக்கும் வேறுபாடுகளை களைய முடியும் என தெரிவித்தார். மேலும், உடனடியாக போரை நிறுத்திவிட்டு, தூதரக நிலையிலான பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கான அனைத்து வழிகளையும் கையாள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அப்போது உக்ரைன் தொடர்பான தற்போதைய நிலவரங்கள் குறித்து பிரதமரிடம் விவரித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புடின். உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள், குறிப்பாக மாணவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதில் அதிகபட்ச முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையும் பிரதமர் மோடி இந்த பேச்சுவார்த்தையின் போது அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து இரு நாட்டு நலன்களை உறுதி செய்ய, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை அவ்வப்போது நடத்தவும் இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்து வரும் சூழலில், விளாடிமிர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதால், உக்ரைன் மீதான போர் கைவிடப்படுமா? அல்லது முழு நாட்டையும் படையெடுத்து, ரஷ்யா தன் வசம் கொண்டு வருமா? என்பது அடுத்து வரும் நாட்களில் தெரிந்து விடும்.

இதையும் படிக்கலாம்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க நேட்டோ தான் காரணமா? - ஓர் பார்வை