இந்தியா

ஜி20 உச்சி மாநாடு : ஜப்பான் சென்றார் மோடி 

ஜி20 உச்சி மாநாடு : ஜப்பான் சென்றார் மோடி 

webteam

ஜப்பானில் நாளை நடைபெறும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றடைந்தார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் நாளை முதல் இரண்டு நாள்கள் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்று சேர்ந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு முன் அவர் வெளியிட்ட அறிக்கையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பயங்கரவாதம் போன்ற பொதுவான சவால்களை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஜி20 மாநாட்டில் எடுத்துரைக்கப்படும் என மோடி தெரிவித்தார். மேலும் 2022ம் ஆண்டு இந்தியா தனது 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் தருணத்தில் இந்தியாவில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டை நடத்துவது என்ற குறிக்கோளை எட்ட ஒசாகாவில் நடைபெறும் உச்சிமாநாடு ஒரு முக்கிய படிகட்டு என மோடி தெரிவித்துள்ளார். 

ஜி20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களுடனான சந்திப்பை ஆர்வமுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜப்பானின் நடைபெறும் இந்த ஜி20 மாநாட்டில், ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களும் பங்கேற்க உள்ளனர். அதன்படி, மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் ஜி20 நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா‌, சவுதி அரேபியா, பிரேசில், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.‌