பிரதமர் மோடி முகநூல்
இந்தியா

தேர்தல் 2024 | ஜனநாயக கடமையாற்றினார் பிரதமர் மோடி!

ஜெனிட்டா ரோஸ்லின்

7 கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவை தேர்தலின் முதல் இரண்டு கட்டங்கள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில் 94 தொகுதிகளில் மூன்றாம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடுகிறார். இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட ரானிப்பகுதியில் உள்ள நிஷான் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார் பிரதமர் மோடி. இதனை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனது வாக்கினை செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமார் மோடி, “மூன்றாம் கட்ட தேர்தலில் மக்கள் அதிகபட்சமாக வாக்குப்பதிவு செய்ய வேண்டும். வெயில் அதிகமாக இருப்பதால் அனைவரும் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும். மேலும், தேர்தலின்போது வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை. எனவே, தேர்தல் ஆணையத்திற்கு எனது பாராட்டுகள்.” என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்டத்தேர்தலை பொறுத்தவரை மொத்தம் 94 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதன்படி, குஜராத்தில் 25, கர்நாடகாவில் 14, மகாராஷ்டிராவில் 11, பீகாரில் 5, மத்தியப் பிரதேசத்தில் கடந்த கட்டத்தில் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறாத பெதுல் தொகுதி உட்பட 9 தொகுதி, உத்தரப்பிரதேசம் 10, மேற்குவங்கம், அசாமில் தலா 4, சத்தீஸ்கரில் 7, கோவாவில் 2, டையூ டாமனில் தாத்ரா நகர் ஹவேலி ஆகியவற்றிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

குஜராத்

குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 26 தொகுதிகளில், சமீபத்தில் சூரத் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் எந்தவித போட்டியுமின்றி தேர்வானார். ஆகவே அந்த ஒரு தொகுதியை தவிர மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 2014, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது பாஜக அலை வீசியதால் பாஜக வெற்றி பெற்றதுள்ள நிலையில், தற்போது நடைபெறும் தேர்தல் பெரும் எதிர்ப்பார்பினை பாஜகவினரிடையே உருவாக்கியுள்ளது.