பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரீஷியஸ் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “பொங்கல் திருவிழா நன்னாளில் தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகள். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டுவர நான் பிரார்த்திக்கிறேன். தேசத்திற்கு உணவளிக்கக் கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.