pariksha pe charcha twitter
இந்தியா

”படுக்கைக்குச் சென்றவுடன் 30 வினாடிகளுக்குள் உறங்கிவிடுவேன்” - மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பிரதமர்!

Prakash J

மாணவர்களுடன் கலைந்துரையாடிய பிரதமர் மோடி

ஆண்டுதோறும் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனைகளை கூறும் வகையில் பிரதமர் மோடி Pariksha Pe Charcha என்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்று (ஜன.29) இந்த நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் 3,000 பேர் நேரடியாக பங்கேற்றனர். நாடு முழுவதும் 2.26 கோடி மாணவர்கள், 14.93 லட்சம் ஆசிரியர்கள், 5.69 கோடி பெற்றோர் ஆன்லைன் வாயிலாக கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இதில் மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார்.

”நான், படுக்கைக்குச் சென்றவுடன் 30 வினாடிகளுக்குள் உறங்கிவிடுவேன்”

இவ்விழாவில் பேசிய மாணவர்களுக்கு நிறைய ஆலோசனைகள் வழங்கிப் பேசினார். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சிரித்தபடியே பதில் அளித்தார். குறிப்பாக மாணவர்களிடம் கடின உழைப்பு மற்றும் நல்ல உறக்கம் குறித்துப் பேசினார். இதுகுறித்து அவர், “மொபைல் செயல்பட சார்ஜிங் தேவைப்படுவதுபோல, உடலை ரீசார்ஜ் செய்து வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் ஆரோக்கியமான மனதுக்கு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதற்கு, சரியான தூக்கம் மிகவும் முக்கியமானது. தூக்கத்தின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். ’உறங்கச் செல்லுங்கள்' என்று உங்கள் அம்மா கூறும்போது, ​​​​அதைத் தடுக்காதீர்கள்.

நான், படுக்கைக்குச் சென்றவுடன் 30 வினாடிகளுக்குள் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

சரியான தூக்கம் வருகிறதா, இல்லையா என்பது மிகவும் முக்கியம். நீங்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும். தேவையான தூக்கத்தைப் பெறுங்கள். அது மிகவும் நல்ல தூக்கமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் மக்கள் படுக்கைக்குச் சென்றபிறகு நல்ல தூக்கத்தைப் பெறுவது கடினம். நான், படுக்கைக்குச் சென்றவுடன் 30 வினாடிகளுக்குள் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். விழித்திருக்கும்போது முழுமையாக விழித்திருப்பதும், தூங்கும்போது நல்ல உறக்கத்தை எடுப்பதும் சமநிலையை அடைவதற்கு வழியாகும்” என்றார்.

”எனது மிகப்பெரிய நம்பிக்கையே அதுதான்”!

மேலும் மன அழுத்தம் குறித்து அவர், “பிரதமர் பதவியில் பல்வேறு வகையான மன அழுத்தங்கள் ஏற்படுவது இயல்பானது. ஒவ்வொருவர் வாழ்விலும் எதிர்பாராத பிரச்னைகளைச் சந்திக்க நேரிடுகிறது. சிலர் பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் விலகி ஓடுகின்றனர். அவர்களால் வாழ்வில் பெரிதாகச் சாதிக்க முடியாது. அனைத்துச் சவால்களையும் நான் துணிச்சலாக எதிர்கொள்கிறேன். இதன்மூலம் புதியவற்றை கற்றுக் கொள்கிறேன். என்னுடன் 140 கோடி நாட்டு மக்கள் உள்ளனர் என்பது எனது மிகப்பெரிய நம்பிக்கை. 100 மில்லியன் சவால்கள் இருந்தால், பில்லியன் கணக்கான தீர்வுகள் உள்ளன. நான் ஒருபோதும் என்னைத் தனியாகக் காணவில்லை, எல்லாமே என்னிடம் உள்ளது, எனது நாடு மற்றும் நாட்டு மக்களின் திறன்களை நான் எப்போதும் அறிந்திருக்கிறேன்.

இதுவே எனது சிந்தனையின் அடிப்படை அம்சமாகும். எனது நாட்டு மக்களின் திறன்களை நான் எவ்வளவு அதிகரிக்கிறேனோ, அந்தளவுக்கு சவால்களை எதிர்கொள்ளும் எனது திறன் மேம்படும். எதையாவது செய்ய வேண்டும் என்ற உறுதி வலுவாக இருக்கும்போது முடிவெடுப்பது எளிதாகிறது. மிகவும் எதிர்மறையான சூழ்நிலைகளிலும் நேர்மறையான விளைவுகளைத் தேடுவதற்கு இது வலிமை அளிக்கிறது. என் வாழ்க்கையில் ஏமாற்றத்தின் அனைத்துக் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டேன். சுயநல நோக்கம் இல்லாதபோது, ​​முடிவில் குழப்பம் இருக்காது” என்றார்.

”உங்களுடன் நீங்கள் போட்டியிட வேண்டும்”

தொடர்ந்து, “மாணவர்கள் தோல்விகளைக் கண்டு துவளக்கூடாது. தேர்வுக்கான இலக்குகளை நிர்ணயித்து படிப்படியாக செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். திட்டமிட்டுசெயல்பட்டால் தேர்வுக்கு முன்பாக நீங்கள் முழுமையாக தயாராகிவிடலாம். உங்களுடன் நீங்கள் போட்டியிட வேண்டும்; சக மாணவர்களுடன் போட்டி மனப்பான்மை, வெறுப்புணர்வை வளர்க்கக் கூடாது. கடைசி நேரத்தில் பாடங்கள் படிப்பதைத் தவிர்க்க வேண்டும். தேர்வு அறையில் நுழைவதற்கு முன்பாக நண்பர்களோடு இயல்பாக பேசி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். காலை நேர சூரிய ஒளி உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும். இரவு அதிக நேரம் விழித்திருந்து படிக்கக்கூடாது. ஆழ்ந்த தூக்கம் அவசியம். நாள்தோறும் குறைந்தபட்சம் இருவகையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மனம் ஆரோக்கியமாக இருக்கும், தேர்வில் சாதிக்க முடியும்.

கல்வி கற்பதற்கு மட்டுமேசெல்போனை பயன்படுத்த வேண்டும். செல்போனில் ரீல்ஸ் பார்த்து நேரத்தை வீணாக்கக்கூடாது. சமூக வலைதளங்களில் மூழ்கியிருக்கக்கூடாது. சாப்பிடும்போது, படிக்கும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது” என மாணவர்களுக்கு அறிவரை வழங்கிய அவர், பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். இதுகுறித்து அவர், ”பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. அப்பா, அம்மா, அண்ணன், அக்கா என தொடர்ச்சியாக அளவுக்கு அதிகமாக அறிவுரைகளை அள்ளித் தெளித்தால் மாணவ, மாணவியருக்கு மனஅழுத்தம் ஏற்படும். தங்கள் பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதை பெற்றோர் முழுமையாகத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் ஒரு பிள்ளையை உயர்வாகவும் மற்றொரு பிள்ளையை தாழ்த்தியும் பேசக்கூடாது.

ஏழைகள் வறுமையை ஒழிப்பது உறுதி

வறுமை ஒழிப்பு பற்றி குறிப்பிட்ட பிரதமர், ’’ஏழைகள் தாங்களாகவே வறுமையை அகற்ற முடிவு செய்யும்போது, ​​அது போய்விடும். ஒரு வீடு, கழிவறை, கல்வி, ஆயுஷ்மான், குழாய் நீர் போன்ற கனவுகளுக்கான கருவிகளை அவர்களுக்கு வழங்குவது எனது பொறுப்பு. அன்றாட அவமானங்களிலிருந்து விடுபட்டால், அவர்கள் வறுமையை ஒழிப்பது உறுதி" என்றார்.

மேலும் அவர், “விஷயங்களை முதன்மைப்படுத்துவதற்கான ஞானம் ஒருவருக்கு இருக்க வேண்டும். இது அனுபவத்துடனும் எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்வதாலும் வருகிறது. தனது தவறுகளைப் பாடமாக கருதுகிறேன். விளையாட்டு வெற்றியைக் கொண்டாடுவது மற்றும் சரியான யுக்தி, வழிநடத்துதல் மற்றும் தலைமைத்துவம் ஆகியவை சர்வதேச நிகழ்வுகளில் ஒரு நல்ல பதக்கத்தை விளைவித்துள்ளது” என பிரதமர் மோடி கூறினார்.