மோடி, ராகுல் ட்விட்டர்
இந்தியா

“பிரதமர் மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல.. குஜராத் முதல்வராக இருந்த போது..” - ராகுல் விமர்சனம்

’பிரதமர் மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல’ என ஒடிசாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Prakash J

‘நான் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே என்னை துஷ்பிரயேகம் செய்கின்றனர்’ என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நடைபெற்ற சத்தீஷ்கர் மாநில சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டிருந்தார். இதற்குமுன்பும், சில தருணங்களில் அவர், தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தைக் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.

காங்கிரஸை வலுப்படுத்தும் நோக்கில் தன்னுடைய இரண்டாவது கட்ட ஒற்றுமை யாத்திரை பயணத்தைத் தொடங்கியிருக்கும் அக்கட்சியின் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி, மணிப்பூரில் இருந்து மும்பை வரை அதை செயல்படுத்தி வருகிறார். அந்த ஒற்றுமைப் பயணம் தற்போது ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

இம்மாநிலத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி பொது பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். தான் ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று பிரதமர் மக்களிடம் பொய் சொல்லி வருகிறார். அவர் தெலி வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 2000ஆம் ஆண்டில் குஜராத்தில் இருந்த பாஜக அரசு தெலி வகுப்பை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தது. இதன்படி மோடி பிறப்பால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை. இதனால் அவர் ஒருபோதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி வழங்க மாட்டார்” எனப் பேசியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு சத்தீஷ்கர் மாநில தேர்தல் பிரசாரத்தின்போதும் ராகுல் காந்தி, ’நாட்டில் ஒரேயொரு சாதிதான் இருக்கிறது என்றால், அவர் (மோடி) ஏன் தன்னை ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொள்கிறார்’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேபோல் கடந்த ஆண்டு, ’பிரதமர் மோடி ஏன் தனது ஜாதியை மறைக்க விரும்புகிறார்’ என பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அக்கட்சியைச் சார்ந்த நீரஜ் குமார், ’சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினால் நரேந்திர மோடி எப்படி ஏமாற்றினார் என்ற உண்மை வெளிவரும். பிரதமர் அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். தவிர, தனது சாதியை ஓபிசியில் சேர்த்துள்ளார்’ எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

"மோத் கஞ்சி சமூகம் கடந்த 2002ஆம் ஆண்டில்தான் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைக்கப்பட்டது. அப்போதுதான் அவர் குஜராத் மாநில முதலமைச்சராகவும் பதவியேற்றார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறைக்க முயன்ற பிரதமர் மோடி, 1994ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோதே மோத் கஞ்சி சமூகம் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கப்பட்டதாக கூறி வருகிறார். மோத் கஞ்சி சமூகத்திற்கு 6 உட்பிரிவுகள் இருக்கின்றன. அதில் ஒன்று கஞ்சி முஸ்லிம் பிரிவு. அந்தப் பிரிவை மட்டும்தான் 1994ஆம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்தார்கள். மற்ற பிரிவுகள் சேர்க்கப்படவில்லை” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.