பிம்ஸ்டெக் நாடுகளுக்குள் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வது அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
BIMSTEC எனப்படும் வங்காள விரிகுடா கடல் பகுதி நாடுகளின் கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இதில் காணொளி முறையில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, பிம்ஸ்டெக் நாடுகளுக்குள் வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிப்பது அவசியம் எனத் தெரிவித்தார். இதற்காக தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். பொருளாதார மற்றும் சுகாதார ரீதியான சவால்கள் அதிகரித்து வரும் நிலையில் பிம்ஸ்டெக் நாடுகள் இடையே ஒற்றுமையும், நல்லிணக்கமும் இந்த காலகட்டத்தின் அவசியமாக விளங்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஐரோப்பாவில் அண்மை காலமாக நடந்து வரும் நிகழ்வுகள் சர்வதேச கட்டமைப்பையே மாற்றியுள்ளதாகவும் உக்ரைன் பிரச்னையை சுட்டிக்காட்டும் வகையில் பிரதமர் கூறினார். பிம்ஸ்டெக்கின் நிர்வாக தேவைகளுக்காக இந்தியா ஏழரை கோடி ரூபாயை வழங்கும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
வங்கக்கடல் பகுதியில் உள்ள இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான், தாய்லாந்து மியான்மர் ஆகிய நாடுகள் இணைந்து பிம்ஸ்டெக் என்ற பெயரில் கூட்டமைப்பை கடந்த 1997ஆம் ஆண்டு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது
இதையும் படிக்க: இன்று இரவு டெல்லி புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் மோடியுடன் சந்திப்பு