2 ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன் போர்க்கள பூமியாக காட்சியளிக்கிறது. விமான நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்புதான் ரஷ்யா சென்று திரும்பிய பிரதமர் மோடி, தற்போது போலந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து அரசு முறைப் பயணமாக உக்ரைனுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். அந்நாட்டில் போர் நடந்து வருவதன் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி ரயில் பயணத்தை தேர்வு செய்துள்ளார்.
டிரெய்ன் ஃபோர்ஸ் ஒன் என்ற அந்த சொகுசு ரயிலில் குண்டு துளைக்க முடியாத பெட்டி, அதிநவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் என சிறப்பு அம்சங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன.
ரயிலில் செல்லும் விவிஐபியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறப்பு பயிற்சி பெற்ற பாதுகாவலர் குழு ஒன்றும் உள்ளது. வெளியிலிருந்து ஆபத்து ஏதேனும் வருகிறதா என தொடர்ச்சியாக இந்தக்குழு கண்காணித்துக்கொண்டே இருக்கும். பிரமாண்ட திரை உள்ள டிவி, கலந்துரையாடல் கூடம், படுக்கை அறை என சொகுசு வசதிகளும் இந்த ரயிலில் உண்டு.
போலந்து நாட்டிலிருந்து உக்ரைன் தலைநகர் கீவுக்கு செல்ல இந்த ரயில் 10 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. கிரிமியா பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்த ரயில் உக்ரைன் போருக்கு பிறகு விவிஐபிக்கள் அங்கு செல்வதற்கு ஏற்ற சிறப்பு போக்குவரத்து வாகனமாகிவிட்டது.
இதற்கு முன்னர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸ் ஆகிய தலைவர்களும் இந்த ரயில் மூலம்தான் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளனர். இந்த பயணத்தின் மூலம் உக்ரைன் நாடு உருவான பிறகு அந்நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற இருக்கிறார் பிரதமர் மோடி. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்துப் பேச உள்ள மோடி, ரஷ்யாவுடனான போர் குறித்தும் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதிலும், போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா கொண்டிருக்கும் அக்கறையை வெளிக்காட்டுவதாக மோடியின் பயணம் அமைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கட்டித் தழுவிய சில வாரங்களில், அவர் சண்டையிட்டு வரும் உக்ரைனுக்கு பிரதமர் மோடி செல்வது சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.