மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தலுக்கு பல நாட்களுக்கு முன்பே பரப்புரைகளைத் திட்டமிட்டு மேற்கொள்வது பாஜகவின் வழக்கம். அதன்படி, பிரதமர் மோடி மற்றும் மூத்த பாஜக தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்துவருகிறார்கள். அந்த வகையில், இன்று ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, நவராத்திரி காலங்களில் அசைவ உணவு உண்பது குறித்து கடுமையான விமர்சனத்தை எதிர்க்கட்சி மீது வைத்துள்ளார் பிரதமர் மோடி.
“காங்கிரஸ் மற்றும் I-N-D-I-A கூட்டணி தலைவர்கள் பெரும்பான்மையான இந்திய மக்களின் உணர்வுகள் குறித்து கவலைப்படுவதில்லை. அவர்கள் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள். கூட்டணி கட்சியின் சில தலைவர்கள் சாவன் (Sawan) மாதத்தில் மட்டன் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். அவர்கள் அதனை வீடியோ எடுத்து பதிவிட்டு இந்திய மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
யார் என்ன சாப்பிட வேண்டும் என்பதை சட்டம் தடுக்கவில்லை. சைவமோ, அசைவமோ யாருக்கு என்ன பிடித்திருக்கிறதோ, அதனை உண்பதற்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால், I-N-D-I-A கூட்டணி தலைவர்களின் நோக்கம் தவறானது. அவர்களுடைய நோக்கம் முகலாயர்களுடையதைச் சார்ந்தது. அவர்கள் இந்த நாட்டில் உள்ள மன்னர்களை தோற்கடித்ததில் திருப்தி அடையாமல், கோயில்களை அழித்தவர்கள். I-N-D-I-A கூட்டணி தலைவர்களும் முகலாயர்களின் மனநிலையில் வீடியோக்களை பதிவிட்டு இந்திய மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். இப்படிச் செய்து அவர்களின் வாக்குவங்கியை உறுதி செய்ய நினைக்கிறார்கள்” என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
முன்னதாக, ஏப்ரல் 9ஆம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், மீன் சாப்பிடும் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ வைரல் ஆனது. ”அந்த வீடியோவில், “நான் நாள் முழுவதும் தேர்தல் பரப்புரை செய்து வருகிறேன். மதிய உணவு சாப்பிட இந்த 15 நிமிடம்தான் கிடைத்தது. அதனால், இன்று மீன் மற்றும் ரொட்டியை மதிய உணவாகச் சாப்பிடுகிறேன். நான் சாப்பிட்டதிலேயே சிறந்த மதிய உணவு இதுதான்” என்று பதிவிட்டிருந்தார் தேஜஸ்வி.
ஆனால், வசந்த நவராத்திரி காலத்தில் அசைவ உணவு சாப்பிடும் வீடியோவை ஷேர் செய்துள்ளதாக பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்திருந்தனர். சர்ச்சையானதால், அதற்கு விளக்கம் அளித்திருந்தார் தேஜஸ்வி. ”நவராத்திரி தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 8ஆம் தேதி அந்த வீடியோ எடுக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக ஏப்ரல் 9ஆம் தேதி பதிவிட்டிருந்தேன்” எனக் கூறியிருந்தார்.
பிரதமர் மோடியே தெளிவாகச் சொல்லி இருப்பதுபோல், உணவு என்பது ஒவ்வொரு தனிநபருடைய உரிமை சம்பந்தப்பட்டது. அப்படி இருக்கையில், தேர்தல் பரப்புரையில் இந்த விஷயத்தை பிரதமர் கையாள்வது எப்படிச் சரியாக இருக்கும். இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு. குறிப்பிட்ட சில மாதங்களில் எல்லோரும் அசைவ உணவைத் தவிர்ப்பதில்லை. குறிப்பிட்ட சில சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அப்படிச் செய்வார்கள். சிலர் வாரத்தில் சனிக்கிழமைகளில் அசைவ உணவு உண்பதில்லை, சிலர் வெள்ளிக்கிழமைகளில் உண்பதில்லை.
அசைவ உணவுகளிலேயே சிலர் மாட்டுக்கறி உண்பதில்லை, சிலர் பன்றிக்கறி உண்பதில்லை. ஒவ்வொரு பிரிவினருக்கு ஒவ்வோர் உணவு முறை இருக்கிறது. சைவ உணவுகளிலேயே சிலர் மண்ணிற்குக் கீழே விளைந்த உணவுகளை உண்பதில்லை. இப்படி கோடிக்கணக்கான நம்பிக்கைகளை கொண்ட நாடுதான் இந்தியா. அப்படி இருக்கையில், இதை வைத்து அரசியல் செய்வது தவறான முன்னுதாரணமாகவே மாறும்.
அசைவ உணவு என்பது ஏதோ தவிர்க்க வேண்டிய ஒன்று என்பது போல் பிரதமரின் பேச்சு உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அசைவ உணவு உண்பவர்கள். குறிப்பாக தென்னிந்தியாவில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அசைவ உணவு உண்பவர்கள்.
ஒரு அரசியல் தலைவர் அசைவ உணவு உண்பதை வீடியோ எடுத்து பதிவிட்டாலே இந்தியர்களின் மனது புண்பட்டுவிடும் என்று பிரதமர் சொல்வது என்ன வகையான வாதம். இது மிகவும் அதீதமான வாதம். அதுவும் தேர்தல் காலங்களில் அரசியல் தலைவர்கள் இதுபோன்ற வீடியோக்களை பதிவிடுவது மிகவும் இயல்பான ஒன்றுதானே.
உணவு விஷயத்தை அடுத்து, மதம் தொடர்பாகவும் பிரதமர் தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். ராமர் கோயில் விவகாரத்தை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார். ராமர் கோயில் என்பது தனியார் அறக்கட்டளை ஏற்பாடு செய்த நிகழ்வு. அந்த நிகழ்வுக்கு போவதும் போகாமல் இருப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ராமர் மீதான பக்தியையும் அயோத்தில் உள்ள ராமர் கோயிலுக்கு போவதையும் போட்டு ஏன் குழப்ப வேண்டும்? அப்படியெனில் தேர்தலுக்காகவா ஜனவரியில் அவசரஅவசரமாக ராமர் கோயில் திறக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுமல்லவா? உணவு, மதம் போன்றவற்றை அரசியலை கலக்கக்கூடாது. அப்படி கலப்பது மிகப்பெரிய ஆபத்தில்தான் போய் முடியும்.
மாட்டிறைச்சி கொண்டு சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள் பலர் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாட்டிறைச்சி கொண்டு சென்றாலே அதனை கேட்பதற்கு மற்றவர்களுக்கு உரிமை கிடையாது. ஆனால், கொண்டு செல்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் வன்முறையில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. அப்படியான சம்பவங்கள் நடக்கும் நாட்டில், அசைவ உணவு வீடியோ பதிவிட்டு விட்டாலே இந்திய மக்களின் உணர்வு புண்பட்டுவிடும் என்று சொல்வது வெறுப்பை விதைக்கும் ஒன்றுதானே. அதுவும் நாட்டின் பிரதமரே இப்படியான ஒரு வாதத்தை வைப்பது எப்படி சரியாக இருக்கும்.
அசைவ உணவு விவகாரம் தான் தற்போது நாட்டில் மிகப்பெரிய விவகாரமா என்ன?