பிரதமர் மோடி  ட்விட்டர்
இந்தியா

“கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டுமென்பதை மத அடிப்படையில் காங். முடிவு செய்யும்”-பிரதமர் பேச்சு!

"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்" என பிரதமர் மோடி தெரிவித்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

Prakash J

நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஜனநாயகப் பெருவிழாவில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளையும் மீறி, பல வேட்பாளர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயினும் சர்ச்சை பேச்சுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. ஏற்கெனவே சர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் மோடி பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் பாஜக சார்பில் நேற்று (மே 7) பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள். விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே அவர்களின் நோக்கம்.

1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது காங்கிரஸ் ஏன் அதை 3 துண்டுகளாகப் பிரித்தார்கள். அவர்கள் அப்போதே முழு நாட்டையும் பாகிஸ்தானாக மாற்றி இந்தியாவின் தடயங்களை அழித்திருக்க வேண்டும். மோடி உயிருடன் இருக்கும்வரை போலி மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்தியாவை அழிக்கவிட மாட்டேன்.

ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்ய காங்கிரஸ் விரும்புகிறது. பாஜக 400 இடங்களில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் 'பாபரின் பெயரில்' ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் பூட்டு போட்டுவிடும் மற்றும் ஜம்மு காஷ்மீரின் 370 சட்டப்பிரிவை காங்கிரஸ் மீண்டும் கொண்டுவரும்" எனத் தெரிவித்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

இதையும் படிக்க: "அதானி, அம்பானி குறித்து ராகுல் பேசாதது ஏன்?".. கேள்வியெழுப்பிய பிரதமர்.. பதிலடிகொடுத்த பிரியங்கா!