கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் 19 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27-ம்தேதி குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கரசேவர்கள் வந்த இரு பெட்டிகளில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் ரயில் பெட்டிகளில் பயணம் செய்த 59 கரசேவர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 31 பேரைக் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதில் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும், 11 பேருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், அந்த 11 பேரின் மரண தண்டனையையும் குஜராத் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
இந்த வழக்கில் இன்னும் பலர் தேடப்பட்டு வருகின்றனர். அதில் முக்கியமானவர் ரபீக் ஹூசைன் பதுக் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் எரிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டிய குழுவில் ஹூசைனும் இருந்துள்ளார். இவர் மீது கலவரத்தைத் தூண்டுதல், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டும் கைது செய்ய முடியவில்லை.ரயிலை கொளுத்த பெட்ரோல் ஏற்பாடு செய்தவரும் இவரே எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோத்ராவுக்கு வந்து சென்று தப்பிச்செல்ல முயன்றபோது கோத்ரா போலீசார் ஹீசைனை கைது செய்தனர்.
இதுகுறித்து பஞ்சமால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லீனா பாட்டீல் கூறுகையில், ‘’கடந்த 19 ஆண்டுகளாக ஹூசைன் டெல்லியில் மறைந்து வாழ்ந்துள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சலிம் இப்ராஹிம் பாதம், சவுகத் சர்கா, அப்துல் மஜித் யூசுப் மிதா ஆகியோர் இன்னும் தலைமறைவாக இருக்கிறார்கள்” என்றார்.