உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயில் வளாகத்திற்குள் பூசாரி ஒருவரும், அவரது மகனும் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சம்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று கோயில் ஒன்றின் உள்ளே இறந்து கிடந்த இருவரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பூசாரி மற்றும் அவரது மகன் என்பது தெரியவந்தது. அத்துடன் அவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த மாதம் உத்தரப் பிரதேசத்தின் புலந்ஜர் மாவட்டத்தில் ஜெகதீஷ் என்ற சாமியாரும், அவரது சீடரான ஷேர் ஷிங் என்பவரும் கோயில் வளாகத்தில் இறந்து கிடந்தனர். அவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், முராரி அலியாஸ் ராஜூ என்பவரைக் கைது செய்தனர்.
இதுதொடர்பான விசாரணையில், தான் திருடியது தொடர்பாகச் சாமியாரும், அவரது சீடரும் தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாக அவர்களைப் போதையில் அடித்துக்கொன்றதாகவும் முராரி வாக்குமூலம் அளித்திருந்தார்.