இந்தியா

புதுச்சேரி அமைச்சரவையின் ராஜினாமா ஏற்பு: விரைவில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

புதுச்சேரி அமைச்சரவையின் ராஜினாமா ஏற்பு: விரைவில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

sharpana

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டோம் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ள நிலையில் அங்கு விரைவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வர இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனை உறுதி செய்யும் விதத்தில் புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். 

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அவர் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அந்த கடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க மாட்டோம் என்ற அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார் அதிமுக சட்டமன்றக்குழு தலைவர் அன்பழகன்.

காங்கிரஸ் அரசு தானாக கவிழ்ந்தது என்றும் அதற்கு பாஜக காரணம் இல்லை எனவும் கூறிய அக்கட்சியின் நியமன சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், ஆட்சி அமைக்க கூட்டணியில் யாரும் உரிமை கோர மாட்டோம் எனத் தெரிவித்தார்.

கடைசியாக 1991ஆம் ஆண்டு புதுச்சேரியில் திமுக ஆட்சி கவிழ்ந்தது. அதற்கு பிறகு 30 ஆண்டுகள் கழித்து இப்போது காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இந்த சூழலில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் களம் கடந்த சில நாட்களாக அங்கு நிலவிய பரபரப்பை மிஞ்சும் என்பதில் ஐயமில்லை.