இந்தியா

பிரதமர், முதல்வர்கள் புடைசூழ திரௌபதி முர்மு வேட்புமனு - ஓ.பி.எஸ், தம்பிதுரை பங்கேற்பு

பிரதமர், முதல்வர்கள் புடைசூழ திரௌபதி முர்மு வேட்புமனு - ஓ.பி.எஸ், தம்பிதுரை பங்கேற்பு

சங்கீதா

குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னணி வகிக்கும் தேசிய ஜனநாய கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஆதரவுடன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலர் ப்ரமோத் சந்திரா மோடியிடம், திரௌபதி முர்மு தனது வேட்புமனுவை அளித்தபோது பாரதிய ஜனதா கட்சி முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உடனிருந்தனர்.

திரௌபதி முர்முவின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியின்போது அதிமுக சார்பாக முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஏற்கெனவே தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கு, ஏற்கெனவே அதிமுக ஆதரவை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளதாக தம்பிதுரை புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார்.

சி.டி. ரவி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு கோரி சென்னையில் அதிமுக தலைவர்களை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. திரௌபதி முர்மு வேட்புமனுவை முன்மொழிந்தோர், வழிமொழிந்தோர் பட்டியலில் அதிமுக இடம் பெற்றது என அந்தக் கட்சியின் தலைவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக திரௌபதி முர்மு நாடாளுமன்ற வளாகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வருகைதந்தபோது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள், அவரை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே வரவேற்றனர். மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. முதல்வர்கள் திரௌபதி முர்முவை வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் வரவேற்றனர். யோகி ஆதித்யநாத், பசவராஜ் பொம்மை, மனோகர் லால் கட்டார், மற்றும் சிவராஜ் சிங் சவுகான் ஆகிய பா.ஜ.க. முதல்வர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதேபோல் மூத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ப்ரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரித்து அவரது பெயரை முன்மொழிந்தனர். பிஜு ஜனதா தளம், அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி காட்சிகளை சேர்ந்த பல தலைவர்களும் வேட்புமனு தாக்கலில் பங்கேற்றனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்வார் என எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரி காட்சிகள், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, சிவா சேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தாலும், சின்ஹா வெற்றி பெற வாய்ப்பு இல்லை என கருதப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு பிஜு ஜனதாதளம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆதரவு அளிப்பதால், சின்ஹா தோல்வி அடைவர் என பா.ஜ.க. தலைவர்கள் கருதுகின்றனர். ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியின் குடியரசுத் தலைவர் தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- புது டெல்லியிலிருந்து செய்தியாளர் கணபதி சுப்ரமணியம்