குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக டெல்லியில் வருகிற 21-ம் தேதி சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கக்கூடிய சூழ்நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்கட்சிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.
அண்மையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில், டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டு, எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டு, மீண்டும் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி வருகிற 21-ம் தேதி, பிற்பகல் 2.30 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது ஒருபுறமிருக்க பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பா.ஜ.க. சார்பில் 14 பேர் கொண்ட மேலாண்மை குழு இன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : விக்னேஷ் முத்து