இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல் - இன்று வேட்புமனு தாக்கல்

webteam

புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ந் தேதி நடக்கவுள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த தேர்தல் நடத்தும் அதிகாரியாக பாராளுமன்ற செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தந்த மாநில சட்டசபை செயலாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டசபை செயலாளர் க.பூபதி மற்றும் இணைச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் உதவி தேர்தல்
நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் இவர்களில் ஒருவரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த தேர்தலுக்கான டெபாசிட் தொகை ரூ.15 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பதிவாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெறுவோர் மட்டுமே டெபாசிட்டை திரும்பப் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், டெல்லி மேல்சபை உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களிக்கலாம்.
இவர்கள் வாக்களிப்பதற்கு சட்டசபை அருகே தனி இடம் ஒதுக்கப்படும். வாக்குச்சீட்டின் மூலம்தான் வாக்களிக்க முடியும் என்றும், எம்.பி.க்களுக்கான வாக்குச்சீட்டின் நிறம் பச்சையாகவும், எம்.எல்.ஏ.க்களுக்கான வாக்குச்சீட்டின் நிறம் பிங்க் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 வயது நிறைவு பெற்ற இந்தியர் யார் வேண்டுமானாலும் இந்தப் பதவிக்கு போட்டியிடலாம். போட்டியிடுபவரின் வேட்புமனுவை, 50பேர் முன்மொழியவும், வேறு 50 பேர் வழிமொழியவும் வேண்டும். இன்று காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 28-ந் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.