இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, குடியரசுத் தலைவர் பதவிக்கான தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார். இதற்கான அறிவிக்கை வரும் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 29 ஆகும். வேட்பு மனுக்கள் ஜூலை 2-ம் தேதி சரிபார்க்கப்பட்டு இறுதி செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4,033 மாநில சட்டப்பேரவைகளின் உறுப்பினர்கள் என மொத்தம் 4,809 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.