இந்தியா

ஆதார் இல்லாததால் சிகிச்சை மறுப்பு: மருத்துவமனை வாசலில் பிரசவம்

webteam

ஆதார் அட்டை இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்ட கர்ப்பிணி, மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்குள் அனுமதிக்க முடியும் என அதன் ஊழியர்கள் கூறிவிட்டனர். இதனால் செய்வதறியாது தவித்த கர்ப்பிணி, மருத்துவமனை வாசலிலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.

இதுபற்றி அந்தப் பெண்ணின் கணவர் கூறும்போது, ‘மருத்துவமனை ஊழியர்கள் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை போன்றவற்றைக் கேட்டனர். இல்லை என்று சொன்னோம். ’அப்படியென்றால் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது’ என்று கூறிவிட்டனர். இதனால் வேறு மருத்துவமனைக்குச் செல்வதற்காக வெளியே வந்தோம். வாசலில் என் மனைவிக்கு குழந்தை பிறந்துவிட்டது’ என்றார்.

மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறும்போது, ‘மாவட்ட மருத்துவமனைக்கு அவரை பரிந்துரைத்திருக்கிறார் டாக்டர். அதற்குள் அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது. பிறகு மருத்துவமனைக்குள் சேர்த்து சிகிச்சை அளித்தோம். இப்போது தாயும் சேயும் நலம்’ என்றார்.