ம.பி முகநூல்
இந்தியா

ம.பி | மருத்துவமனையில் கணவர் இறந்து கிடந்த படுக்கையின் ரத்தத்தை சுத்தம் செய்த 5 மாத கர்ப்பிணி மனைவி!

ம.பி: துப்பாக்கிச்சூட்டிற்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அவரது ரத்தப்படுக்கையை அவரது 5 மாத கர்ப்பிணி மனைவி துடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவிவருகிறது. என்ன நடந்தது? பார்க்கலாம்...

ஜெனிட்டா ரோஸ்லின்

மத்தியப் பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டிற்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட படுக்கையை, அவரது 5 மாத கர்ப்பிணி மனைவி துடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவிவருகிறது. என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்...

மத்தியப் பிரதேசத்தில், பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் திண்டோரி மாவட்டத்தில் உள்ள லால்பூர் என்ற கிராமத்தில் சில குடும்பங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த நிலத்தகராறு பிரச்னை காரணமாக கடந்த அக். 31 அன்று, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு தந்தை மற்றும் அவரது மூன்று மகன்கள் என நால்வர் சிலரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். இவர்களில், சம்பவ இடத்திலேயே தந்தை மற்றும் மகன்களில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

மீதமிருந்த சகோதரர்கள் சிவராஜ் மற்றும் ராம்ரா ஆகிய இருவர், உடனடியாக அருகிலிருந்த கடசராய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சிவராஜ்ஜும் சிசிக்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பின் சிவராஜ் இறந்த கிடந்த ரத்தம் படிந்த மருத்துவப் படுக்கையை சிவாராஜின் ஐந்து மாத கர்ப்பிணி மனைவியான ரோஷினியை வைத்து மருத்துவமனை நிர்வாகம் சுத்தம் செய்ய வைத்துள்ளதாக தெரிகிறது. மருத்துவமனை நிர்வாகம் இதை மறுத்தபோதிலும், ரோஷினி தன் கணவரின் கடைசி படுக்கையை துணிகளை கொண்டு சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவில், ஒரு கையில் ரத்தக்கறை படிந்த துணியையும், மற்றொரு கையில் tissues-களையும் வைத்து ரோஷினி படுக்கையை சுத்தம் செய்யும் காட்சிகளை காண முடிகிறது.

இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், கடசராய் சுகாதார மையத்தின் மருத்துவர் சந்திரசேகர் தேகம் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அதில் அவர், “சுத்தம் செய்வதற்கென ஊழியர்கள் இருக்கிறார்கள். படுக்கையை சுத்தம் செய்யும்படி அந்த பெண்ணிடம் யாரும் கூறவில்லை. வியாழன் அன்று நிலத்தகராறில் 4 ஆண்கள் சுடப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் எங்களது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

அதில் ஒருவர் இறந்த நிலையில் அவரின் மனைவிதான், தன் கணவரின் படுக்கையில் இருக்கும் ரத்தத்தை ஆதாரமாக பயன்படுத்த தான் வைத்துள்ள ஒரு துணியால் துடைக்க அனுமதிக்குமாறு எங்களிடம் கேட்டார். நாங்களாக அவரை துடைக்க சொல்லவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 4 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில், சந்தேகத்தில் பேரில் 7 பேரை காவல்துரையினர் கைது செய்து அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.