இந்தியா

"யானையின் கருப்பையில் நான் கண்ட காட்சி" - உணர்ச்சிவசப்பட்ட பிரேதப் பரிசோதனை மருத்துவர் !

"யானையின் கருப்பையில் நான் கண்ட காட்சி" - உணர்ச்சிவசப்பட்ட பிரேதப் பரிசோதனை மருத்துவர் !

jagadeesh

கேரள மாநிலத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கர்ப்பிணி யானையின் மரணம் மூச்சுத்திணறலால் உயிரிழப்பு ஏற்பட்டது என்று கால்நடை மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்து யானை ஒன்று பசியுடன் ஊருக்குள் வந்துள்ளது. பசியுடன் தெருவில் சுற்றிய அந்த யானை, மனிதர்கள் கொடுத்த உணவுகளை உண்டுள்ளது. கருவுற்றிருந்த அந்த யானைக்கு, அன்னாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்து சில மனித மிருகங்கள் கொடுத்துள்ளன. அதை யானை சாப்பிட்ட போது, அதன் வாயிலேயே வெடிமருந்து வெடித்திருக்கிறது. இதனால் வாய் மற்றும் நாக்கில் பலத்தைக் காயமடைந்த யானை வலி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடியுள்ளது.

ஆனாலும் எந்த மனிதரையும் தாக்காமல், எந்த வீட்டையும் சேதப்படுத்தாமல் அந்த யானை சென்றிருக்கிறது. பசி அதிகமாக இருந்ததால் எதையாவது உண்ணலாம் என யானை நினைத்த போதும், வாயில் ஏற்பட்ட காயத்தால் எதையும் உண்ண முடியாமல் தவித்துள்ளது. பின்னர் வலி தாங்க முடியாமல் ஆற்றில் இறங்கி நின்றுள்ளது. இதை அறிந்த வனத்துறையினர் இரண்டு யானைகளின் உதவியுடன் அதனை மீட்க முயன்றுள்ளனர்.

சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்ட யானை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. இந்தத் தகவலை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கேரள வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் சோகத்துடன் பகிர்ந்துள்ளார். யானையைக் கொன்றவர்களுக்கு உரியத் தண்டனையைக் கொடுக்க வேண்டும் எனப் பலரும் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்த பெண் யானைக்கு 15 வயதாகிறது.

இந்த யானையைப் பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட வன உதவி கால்நடை மருத்துவர் டேவிட் ஆப்ரஹாம் "டைம்ஸ் நவ்"க்கு அளித்த பேட்டியில் "நான் இதுவரை 250 யானைகளுக்கும் மேல் பிரேதப் பரிசோதனை செய்திருக்கிறேன். ஆனால் இந்த முறை என்னால் இதனை இன்னொரு பிரேதப் பரிசோதனையாகக் கடந்து செல்ல முடியவில்லை. மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக இருந்தேன். என்னால் கருப்பையிலிருந்த சிசுவைக் கையில் ஏந்தினேன். பிரேதப் பரிசோதனையைத் தொடங்கும்போது யானை கருவுற்று இருக்கும் என நான் நினைக்கவில்லை. ஆனால் கருப்பையில் சிறிய இதயமும், அதில் அம்நியோடிக் அமிலம் இருப்பதை வைத்துத்தான் யானை கர்ப்பமாக இருப்பதை அறிந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்ட வெடிமருந்துகள் யானை உடலில் சென்று வெடித்ததில் அதன் நுரையீரலும் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் உயிரிழந்ததாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.