காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டிருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் புல்வாமா தாக்குதல் குறித்து பேசியிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும். இந்தத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆதாரத்துடன் வந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இவரின் கருத்துக்குப் பதிலளித்த இந்திய அரசு, ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானிலிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதை விட பெரிய ஆதாரம் என்ன வேண்டும் எனக் கேள்வி எழுப்பியது. இருப்பினும் தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் எந்த நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை.
அதேசமயம் 40 சிஆர்பிஎப் வீரர்களை இழந்ததால், ஆத்திரத்தில் இருந்த இந்திய மக்கள் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தனர். பாகிஸ்தானும் பயங்கரவாதிகள் முகாமை பெரிய அளவில் கண்டுகொள்ளாத நிலையில் அதனை தகர்க்க இந்திய ராணுவம் திட்டமிட்டது. இந்திய ராணுவத்தினர் சுதந்திரமாக செயல்பட பிரதமர் மோடியும் ஒத்துழைப்பு வழங்கிய நிலையில் பயங்கரவாதிகளை அழிப்பதையே இந்திய ராணுவம் குறிக்கோளாக கொண்டது.
அதன்படி பல்வேறு திட்டமிடலுக்குப் பின் இன்று காலை 3.30 மணியளவில் பதிலடி நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டது. கார்கில் வெற்றியின் கிங்காக கருதப்பட்ட ‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்கள் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. இதன் இன்னொரு சிறப்பு, துல்லிய கேமரா. மிக உயரத்திலிருந்து லேசர் நுட்பத்தில் குண்டு போடும் ஆச்சரியம், இந்த விமானத்தின் சிறப்புகளில் ஒன்று. மொத்தமாக 7 வகையான ஆயுதங்கள் இந்தியத் தரப்பிலிருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைக்க, துல்லியமாக சென்று தாக்குதல் நடத்த, எல்லைப் பகுதியை ரகசியமாக கண்காணிக்க போன்ற பணிகளுக்காக 7 ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் பயங்கரவாதிகள் முகாம்களை அழிப்பதே இந்திய ராணுவத்தின் இலக்காக இருந்துள்ளதே தவிர தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்திய ராணுவத்தினர் உறுதியாக இருந்துள்ளனர். இந்தியாவின் அத்துமீறலை பாகிஸ்தான் ராணுவமும் உறுதி செய்துள்ளது.
பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் என்பது பற்றி இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “ பயங்கரவாதிகள் முகாம்கள் அமைத்துள்ள இடம் பற்றிய விவரங்களை பாகிஸ்தானுக்குப் பல முறை தெரிவித்தோம். அவர்கள் வழக்கம்போல மறுப்புத் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே இன்னொரு தற்கொலைப் படை தாக்குதலை, நாட்டின் பல பகுதிகளில் நடத்த, ஜெய்ஷ்- இ- முகமது திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. இதற்காக பால்க்கோட்டில் ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாதி மசூத் அசாரின் உறவினர் மவுலானா யூசுப் அசார் தலைமையில் முகாம்கள் அமைத்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, தற்காப்புக்காக இந்திய விமானப்படை அங்கு தாக்குதலில் ஈடுபட்டது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாதி மசூத் அசாரின் மாமனார் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் பகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பயங்கரவாதிகளை குறி வைத்தே இந்தத் தாக்குதலில் இந்தியா ஈடுபட்டது. இது போர் நடவடிக்கை இல்லை. கட்டாயத்தின் அடிப்படையில் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்’’ என்று தெரிவித்தார்.