பிரசாந்த் கிஷோர் எக்ஸ் தளம்
இந்தியா

”சந்தேகமே இல்லாமல் 300+ இடங்களில் பாஜக வெல்லும்”- ஆருடம் சொன்ன பிரசாந்த் கிஷோரை தேடும் நெட்டிசன்கள்!

”ஒவ்வொரு தேர்தலுக்கும் சரியான கணிப்புகளை வெளியிடும் பிரசாந்த் கிஷோரின் கணிப்பு, இந்த முறை பொய்யாகி இருக்கிறது” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருப்பதடன், அவர் எங்கே போனார் எனத் தேடி வருகின்றனர்.

Prakash J

18வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பெருத்த எதிர்பார்ப்புகளைத் தவிடுபொடியாக்கி இருக்கிறது. எனினும் பாஜக, தமது கூட்டணியுடன் ஆட்சியமைப்பதற்கான நிலையை அக்கட்சி எட்டியுள்ளது. முன்னதாக, பிரபல தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர் 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் கணித்திருந்தார்.

குறிப்பாக அவர், “2019 மக்களவைத் தேர்தலில் பெற்றதைவிட பாஜக, அதிக இடங்களைப் பெறும். அனைத்து சாத்தியக்கூறுகளிலும், பாஜக வலுவான மறுபிரவேசம் செய்யும். அவர்களின் தேர்தல் எண்ணிக்கையை மேம்படுத்தும். தென்னிந்தியாவில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கக்கூடும். இந்த லோக்சபா தேர்தலில் பாஜக 300+ சீட்களில் நிச்சயம் வெல்லும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: 'முக்கிய கேபினேட் இலாக்காக்கள், சபாநாயகர் பதவி'..பாஜகவுக்கு சந்திரபாபு, நிதிஷ் வைக்கும் நிபந்தனைகள்!

தவிர, ஊடகங்களும் பாஜகவே 350 இடங்களுக்கு மேல் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் கருத்துக்கணிப்பில் கூறியிருந்தனர். ஆனால், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக தனிப் பெரும்பான்மையைக் (272)கூடப் பிடிக்கவில்லை. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப் பெரும்பான்மை பெற்ற பாஜக, இந்த முறை வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருப்பதால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க இருப்பது பேசுபொருளாகி வருகிறது.

இந்த நிலையில், ஒவ்வொரு தேர்தலுக்கும் சரியான கணிப்புகளை வெளியிடும் பிரசாந்த் கிஷோரின் கணிப்பு, இந்த முறை பொய்யாகி இருக்கிறது. இதையடுத்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ’பிரசாந்த் கிஷோர் எதை வைத்து இப்படிச் சொன்னார், அவரது ஆரூடம் இந்த முறை பொய்யாகிவிட்டதே, தற்போது எங்கு போய் ஒளிந்துள்ளார்’ என நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க: 1 ஓட்டில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட மும்பை வேட்பாளர்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!