பிரசாந்த் கிஷோர் எக்ஸ் தளம்
இந்தியா

லோக் சபா தேர்தல்| பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு.. தவறை ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர்!

Prakash J

18-வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பெருத்த எதிர்பார்ப்புகளைத் தவிடுபொடியாக்கி இருக்கிறது. எனினும் பாஜக, தமது கூட்டணியுடன் ஆட்சியமைப்பதற்கான நிலையை அக்கட்சி எட்டியுள்ளது.

முன்னதாக, பிரபல தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர் 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து கணித்திருந்தார். குறிப்பாக அவர், “2019 மக்களவைத் தேர்தலில் பெற்றதைவிட பாஜக, அதிக இடங்களைப் பெறும். தென்னிந்தியாவில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கக்கூடும். இந்த லோக்சபா தேர்தலில் பாஜக 300+ சீட்களில் நிச்சயம் வெல்லும்” எனத் தெரிவித்திருந்தார்.

பிரசாந்த் கிஷோர்

ஆனால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தனிப் பெரும்பான்மையைக் (272) கூடப் பிடிக்கவில்லை. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப் பெரும்பான்மை பெற்ற பாஜக, இந்த முறை வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இது பாஜகவுக்கு மட்டுமல்ல, பிரபல தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. ’ஒவ்வொரு தேர்தலுக்கும் சரியான கணிப்புகளை வெளியிடும் பிரசாந்த் கிஷோரின் கணிப்பு, இந்த முறை பொய்யாகி இருக்கிறது. எனவே அவர், ஓடி ஒளிந்துள்ளார்’ என நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.

இதையும் படிக்க: வெறும் 5 நாட்களில் ரூ.579 கோடி.. கிடுகிடுவென உயர்ந்த சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்துகள்!

இந்த நிலையில், ”2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்த தனது கணிப்பு தவறானது” என்று பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “என்னுடைய கணிப்பு எண்களின் அடிப்படையில் 20 சதவீதம் தவறாகிவிட்டது என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பாஜகவுக்கு 300-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று நான் சொன்னேன். ஆனால் அவர்களுக்கு 240 தான் கிடைத்தது.

இப்போது வெளிப்படையாக நான் கூறியது தவறு என்று நிரூபணம் ஆகியிருக்கிறது. ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இதுவரை நான் அப்படி பேசியதில்லை. கடந்த 2 ஆண்டுகளில்தான், நான் எண்ணிக்கை அடிப்படையில் பேசி தவறு செய்துவிட்டேன். இனி எண்ணிக்கை குறித்து நான் பேசப் போவதில்லை” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: வினாத்தாள் கசிவு.. ரிசல்ட்டில் குளறுபடி? நீட் தேர்வு குறித்து அடுக்கடுக்காக எழும் குற்றச்சாட்டுகள்!