இந்தியா

“2021 தேர்தலுக்கு வெற்றி வியூகம்” பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தை அணுகும் அதிமுக

“2021 தேர்தலுக்கு வெற்றி வியூகம்” பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தை அணுகும் அதிமுக

rajakannan

தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் ஐபேக் என்ற நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளார் பிரசாந்த் கிஷோர். இவரது ஐபேக் நிறுவனம், காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளுடனும் பணியாற்றியுள்ளது. 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராவதற்கு இந்த நிறுவனம் பணியாற்றியது.

அதேபோல், பீகாரில் நிதிஷ் குமாருக்கு மெகா கூட்டணி அமைக்க திட்டம் வகுத்தது. கடைசியாக ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஐபேக் நிறுவனம் பணியாற்றியது. இதில், ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் ஜெகன் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆட்சியையும் மாநிலத்தில் பிடித்தது. இதனையடுத்து, கிஷோரின் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கிஷோரின் ஐபேக் நிறுவனத்தினர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றுள்ளார். நாளை அவர் ஐபேக் நிறுவன பொறுப்பாளர்களை சந்திக்க உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 2021 தேர்தலில் ஐபேக் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்து இந்த சந்திப்பின் போது முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தது. இதில், அதிமுகவின் வாக்கு வங்கி சதவீதம் சரிந்தது. சட்டமன்ற இடைத் தேர்தலிலும் 22 இடங்களில் 9ல் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், 2021 தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு உள்ளது. ஜெயலலிதா இல்லாதது அவர்களுக்கு கூடுதல் நெருக்கடி. அதனால், கட்சிகளுக்கு வெற்றியை தேடிதரும் பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்தை எடப்பாடி அணுகியுள்ளதாக தெரிகிறது.