இந்தியா

அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின் பின்னணியில் யார் ? பிரசாந்த் பூஷண் தகவல் !

அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின் பின்னணியில் யார் ? பிரசாந்த் பூஷண் தகவல் !

jagadeesh

ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின் பி‌ன்னணியில் யார் இருந்தார்கள் என்ற புதிய தகவலை வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வெளியிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், பாரதிய ஜனதாவும், ஆர்எஸ்எஸ்ஸூம் இணைந்தே அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை பெரிதாக்கியதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றவும், தங்களுக்கு அதில் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும் பாரதிய ஜனதாவும், ஆர்எஸ்எஸ்ஸூம் அந்தப் போராட்டத்திற்கு அதிக ஆதரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.

அரசியல் பின்னணி குறித்த தகவல் அப்போது போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேவுக்கு தெரியாது என்றும், ஆனால், அவருடன் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்கு தெரியும் என்றும் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற போராட்டத்தை தொடங்கினார்.

அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தான் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி என்ற தனிக்கட்சி தொடங்கி, பின்னாளில் டெல்லியின் முதல்வராக பதவியேற்றார். கட்சிக்காக வகுக்கப்பட்ட கொள்கைகளை குப்பையில் வீசியதால், கெஜ்ரிவாலிடம் இருந்து விலகியதாகவும் இந்தப் பேட்டியின்போது பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.