இந்தியா

'மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்டை ரத்து செய்யத் தயார்’ - மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி

'மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்டை ரத்து செய்யத் தயார்’ - மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி

JustinDurai
12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்டால் இடைநீக்கத்தை திரும்பப் பெற தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரின் முதல் நாளில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்களை அவையின் மீதமுள்ள நாட்களுக்கு இடைநீக்கம் செய்வதாக அவைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களும், நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு தினமும் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, எம்.பி.க்கள் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே சஸ்பெண்ட் விவகாரத்தை மறுபரிசீலனை செய்வதாக வெங்கைய நாயுடு கூறியிருந்தார். ஆனால், மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுத்ததற்கு நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதிலளித்தனர். 12 எம்.பி.க்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லாதபோது எதிா்க்கட்சிகளுடன் என்ன பேசுவது என்று மாநிலங்களவை பாஜக குழுத் தலைவா் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இன்று நடந்த பாஜக எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பிறகு பேசிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ''எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளோம். அவையில் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்கள் நேரில் பார்த்தனர். நாடாளுமன்ற பதிவிலும் உள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டால் உடனடியாக திரும்பப் பெறப்படும்'' என்றார்.