பிரகாஷ் ராஜ் - பவன் கல்யாண் - திருப்பதி லட்டு புதிய தலைமுறை
இந்தியா

“என் கருத்தை பவன் கல்யாண் தவறாக புரிந்துகொண்டது ஆச்சரியமளிக்கிறது” - வீடியோ வெளியிட்ட பிரகாஷ்ராஜ்!

ஜெ.நிவேதா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது’ என்ற புகாரை கடந்த வாரம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்தார். அன்று பற்றிய தீ... இன்னும் அணையவில்லை.

இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் நிலையில், அதையெல்லாம் சற்று ஓரமாக வைத்துவிட்டு, ‘கலப்படம் செய்யப்பட்டதற்கு ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்க போகிறேன்’ எனக்கூறி நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலில் 11 நாள் விரதத்தை மேற்கொண்டுள்ளார். அதிகாரமிக்க பொறுப்பில் இருக்கும் ஒருவர், நடவடிக்கை எடுப்பதில் முழு மூச்சாய் இயங்காதது ஏன் என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.

பவன் கல்யாண்

தன் விரதத்துக்கு இடையே, தொடர்ந்து பல செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தி வருகிறார் பவன். அந்த வரிசையில், ஒரு பேட்டியில் அவர் “சனாதன தர்மத்தை பாதுகாக்க தேசிய அளவில் வாரியம் அமைக்க வேண்டும். சனாதனம் தர்மம் இழிவுப்படுத்தப்படுத்தப்படுவதை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரகாஷ் ராஜ், “நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. குற்றம் புரிந்தவர்கள் யாரென கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுங்கள்.

அதைவிட்டுவிட்டு, ஏன் இந்த விவகாரத்தை தேசிய பிரச்னையாக ஊதி பெரிதாக்குகிறீர்கள்? நாட்டில் ஏற்கெனவே சமூக பதற்றங்கள் அதிகம் உள்ளது (மத்தியில் உள்ள உங்கள் நண்பருக்கு நன்றி)” என, பவன் கல்யாணை மத்திய அரசோடு இணக்கமாக இருப்பதை எடுத்துரைத்து, சூழலை சரியாக கையாள வலியுறுத்தினார்.

ஆனால் இதை நேரெதிராக புரிந்து பதிலளித்த பவன் கல்யாண், “இந்துக்கள் தாக்கப்படும்போது அவர்களை அமைதியாக இருக்க சொல்வது பாரபட்சமானது. எனது வீடு தாக்கப்படும்போது, நான் பேசக்கூடாதா?” என கேள்வி எழுப்பினார்.

பவன் கல்யாண்

இதையடுத்து, தனது கருத்தை பவன் கல்யாண் தவறாக புரிந்துகொண்டது ஆச்சரியமளிப்பதாக, பிரகாஷ் ராஜ் எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார். தன் பதிவில் பிரகாஷ் ராஜ், “பவன் கல்யாண் அவர்களே... உங்கள் செய்தியாளர் சந்திப்பு காணொளியை பார்த்தேன். நான் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். இங்கிருந்து நான் ஊர் திரும்பியதும் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன். அதுவரை எனது பழைய பதிவை படித்து பார்த்து, அதில் கூறியதை புரிந்துகொள்ளுங்கள்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, ‘பிரகாஷ்ராஜ் எந்த இடத்திலும் லட்டில் கலப்படம் செய்யப்பட்டது உண்மையாகும் பட்சத்தில் அதை சரியென சொல்லவில்லை; குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பதுதான் இப்பிரச்னைக்கான தீர்வு என்றுதான் சொல்ல வருகிறார். குற்றவாளியை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டவேண்டிய, உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் ஒரு துணைமுதல்வர்... இப்படி பேட்டிகள் மூலம் பொறுப்பின்றி சமூக பதற்றங்களை உருவாக்குவது ஏன் என்று கேள்வியையே பிரகாஷ்ராஜ் எழுப்பினார்’ என்று பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவு கருத்துகள் வருகின்றன.