பிரஜ்வல் ரேவண்ணா முகநூல்
இந்தியா

ஜெர்மனியில் இருந்து துபாய் பறந்த பிரஜ்வல் ரேவண்ணா; கைது செய்ய கர்நாடக SIT-ன் காய் நகர்த்தல்கள் என்ன?

கர்நாடக அரசியலில் தற்போது வீசும் பரபரப்பு அலைக்கு சொந்தக்காரர் பிரஜ்வல் ரேவண்ணா. தன் மீதான பாலியல் புகார்களால், வெளிநாடுக்கு தப்பியுள்ளார். பிரஜ்வலை கைது செய்ய தீவிரம் காட்டும் சிறப்பு புலனாய்வுக் குழுவின், காய் நகர்த்தல்களைப் பார்க்கலாம்..

PT WEB

பிரஜ்வல் ரேவண்ணா

மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா, ஹாசன் தொகுதி எம்.பி. ஆக உள்ளார். தற்போதைய தேர்தலிலும் இந்தத் தொகுதியின் வேட்பாளர் இவர் தான். பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா, கர்நாடகாவில் அமைச்சராக இருந்தவர். ஹோலெநரசிபுரா தொகுதியில் 6 ஆவது முறையாக எம்.எல்.ஏ...

ஹாசன் மக்களவைத் தொகுதியில், வாக்குப்பதிவு நடந்த மறுநாளே ஜெர்மனி பறந்து விட்டார் பிரஜ்வல். இதற்குக் காரணம், அந்த தருணத்தில் பரபரப்பாக வெளியான சில வீடியோக்கள் தான். அதில், பல்வேறு பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் காட்சிகள் இருந்தன. அதில் இருக்கும் நபர் பிரஜ்வல் தான் என்று, ஆளும் காங்கிரஸ் கடுமையாகக் குற்றம்சாட்டி, பரப்புரை செய்தது. இந்த விவகாரத்தில் முதல்முதலாக புகார் பதிவானது ஹோலெநரசிபுராவில்.

பிரஜ்வல் ரேவண்ணா

ரேவண்ணாவும் அவரது மகன் பிரஜ்வலும் சேர்ந்து தன்னையும் தனது மகளையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார், வீட்டு பணிப்பெண். பிரஜ்வலின் சொந்தக் கட்சியான, மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த, முன்னாள் பஞ்சாயத்து பெண் கவுன்சிலர், பெங்களூருவில், புகார் அளித்தார். பிரஜ்வல் தன்னை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார் அவர். மைசூருவிலும் ஒரு புகார் பதிவானது. தன்னுடைய தாயார் கடத்தப்பட்டதாக, ரேவண்ணா, அவரது உறவினர் சதீஷ் பாபு ஆகியோர் மீது, ஒரு இளைஞர் புகார் அளித்தார். இந்த வழக்குகளை விசாரிக்க SPECIAL INVESTIGATION TEAM அமைக்கப்பட்டு, ஆள்கடத்தல், பாலியல் தொல்லை வழக்குகளில் ரேவண்ணாவும் சதீஷ்பாபுவும் கைது செய்யப் பட்டனர்.

SIT விசாரணை

ஒரு பென் டிரைவில் மட்டும், 2,976 ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும், இதில், அரசு அதிகாரிகள், சினிமா துறையினர் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது இடம்பெற்றிருப்பதாகவும் எஸ்.ஐ.டி. கூறுகிறது. வீடுகளில் சோதனை நடத்தியது எஸ்.ஐ.டி... 2019 - க்கு பிறகு பெங்களூருவிலும் ஹாசனிலும் உள்ள வீடுகளில், வெவ்வேறு அறைகளில் இந்த வீடியோக்கள் பதிவாகியிருப்பது உறுதியாகியுள்ளதாகவும் இந்தக் குழு கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் என இதுவரை 9 பெண்களை கண்டறிந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மற்றவர்களும் புகார் அளிக்குமாறும் எஸ்.ஐ.டி. அறிவுறுத்துகிறது. பிரஜ்வல் வழக்கு தொடர்பான வீடியோக்களை வைத்திருப்பதும் பகிர்வதும் தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரஜ்வல்

SPECIAL INVESTICATION TEAM ல், முதலில் 4 பேர் இருந்த நிலையில், பெங்களூரு மாநகர காவல் ஆணையர், எஸ்.பி.கள், காவல் ஆய்வாளர்கள் என இந்த எண்ணிக்கை படிப்படியாக 28 ஆக உயர்ந்துள்ளது. காவல்துறையின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் இடம்பெற்றுள்ளனர். பிரஜ்வலை குறிவைத்துள்ள எஸ்.ஐ.டி., அனைத்து விமான நிலையங்களுக்கும் LOOK OUT NOTICE அனுப்பியுள்ளது.

SIT காய் நகர்த்தல்கள் என்ன?

எம்.பி. என்பதால் அவரிடம் உள்ள டிப்ளமேடிக் பாஸ்போர்ட் மூலம் தான், பிரஜ்வல், ஜெர்மனிக்கு பறந்திருப்பதாகவும், அங்கிருந்து துபாய் சென்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் மூலம் சில நாடுகளுக்கு விசா இல்லாமலேயே பயணிக்கலாம். ராஜாங்க அதிகாரம் கொண்ட அந்தஸ்தில் இருப்போர், அரசின் பிரதிநிதிகளாக பயணிக்க வசதியாகவே டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.

பிரஜ்வலுக்கு கைது செய்யும் ஒரு கட்டமாக, சிபிஐ மூலமாக, சர்வதேச காவல்துறைக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கி, பிரஜ்வலுக்கு வலை விரித்துள்ளது. ப்ளூ கார்னர் நோட்டீஸ் மூலம், 196 நாடுகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிரஜ்வல் எந்த நாட்டில் இருந்தாலும், அதுபற்றிய தகவலை பெற முடியும். இதன் பிறகு, இன்டர்போலுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி, பிரஜ்வலை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வரவும் எஸ்.ஐ.டி. திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.