பிரஜ்வல் ரேவண்ணா ட்விட்டர்
இந்தியா

பாலியல் புகார்|கர்நாடக எம்.பிக்கு சம்மன்.. அவகாசம் கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா!

பாலியல் புகார் தொடர்பாக விசாரணைக்கு 24 மணி நேரத்திற்குள் ஆஜராகுமாறு சிறப்புப் புலனாய்வுப் படை பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Prakash J

கர்நாடக மாநிலம் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதியின் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான விவகாரம்தான் அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. மேலும் தங்களை அவர் தவறாக பயன்படுத்திக் கொண்டதாகவும், நெருக்கமாக இருக்கும்போது வீடியோ எடுத்து, மிரட்டுவதாகவும் சில பெண்கள் தெரிவித்திருந்தது தேவகவுடா குடும்பத்தையே ஆட்டம்காண வைத்துள்ளது. இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா மஜதவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அவர்மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படையை கா்நாடக அரசு அமைத்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணைக்கு 24 மணி நேரத்திற்குள் ஆஜராகுமாறு சிறப்புப் புலனாய்வுப் படை பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு, அவரது தந்தையும் மஜத கட்சி எம்எல்ஏவுமான ஹெச்.டி. ரேவண்ணாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராக 7 நாள்கள் அவகாசம் கோரியிருப்பதாக தனது வழக்கறிஞர் மூலம் சிறப்புப் புலனாய்வுப் படைக்கு பதில் அனுப்பியிருப்பதாக பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ”உண்மை விரைவில் வெளிவரும்” என தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பிரஜ்வால் ரேவண்ணா பதிவிட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டதால் அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 127 வருட சாம்ராஜ்ஜியம்.. 2 ஆக உடைந்த godrej நிறுவனம்.. பிரிக்கப்பட்ட பங்குகள்!