இந்தியா

‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி

‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி

webteam

76 வயது மூதாட்டி ஒருவர் 500 மரங்களை ஒரே ஆளாக வளர்த்து உத்தரகாண்ட்டில் ஒரு வனத்தை உருவாக்கியுள்ளார்.

உலகின் மிகப் பெரும் அச்சுறுதலாக இருப்பது புவி வெப்பமடைதலும், அதனால் ஏற்படும் பருவநிலை மாறுபாடும் தான். மனிதர்கள் தங்கள் தேவைக்காக மரங்களை வெட்டுவது, பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்துவது, கட்டடங்களை பெருக்க காடுகளை அழிப்பது, நீரை மாசு படுத்துவது என இயற்கை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் மனித இனத்தையே அழிவின் பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இதனால் பலரும் மரங்களின் தேவையை உணர்ந்து, மரங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் கூட அமேசான் காடுகள் எரியும் செய்தி உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் தேவைக்காக 2 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டதற்கு அனைவரிடத்திலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இவ்வாறு உலகம் முழுவதும் மரங்கல் வெட்டப்படுவதும், அழிக்கப்படும் தொடர் கதையாகத் தான். மரங்களை வெட்டுபவர்கள் 100% என்றால், அதை நட்டு வைப்பவர்கள் 10% கூட இல்லை என்பதே சோகமான ஒன்றாக இருக்கிறது.

மனிதர்கள் இப்படி சென்று கொண்டிருக்கையில், இந்த புவியில், மரங்களை உயிராக நினைத்துக்கொண்டு ஒரு மூதாட்டி வாழ்ந்து வருகிறார். உத்தரகாண்டை சேர்ந்த இம்மூதாட்டியின் பெயர் பிரபா தேவி. உத்தரகாண்டில் உள்ள ருத்ராபிரயாக் கிராமத்தை சேர்ந்தவர். சிறுவயதில் பிரபா தேவி தனது குடும்பத்துடன் சிறிய நிலப்பரப்பில் வசித்து வந்தார். அப்போது அவரது கிராமத்தில் தொழில் நிறுவனம் ஒன்றிற்காக மரங்கள் பல வெட்டப்பட்டிருக்கின்றன. இதைக்கண்டது மரங்கள் மீது பிரபா தேவிக்கு பெரும் இரக்கம் ஏற்பட்டுவிட்டது. இதனால் அவர் தனது வீட்டில் உள்ள இடத்தில் முழுவதும் மரங்களை நட்டுள்ளார். 

அத்துடன் தனது வீட்டை சுற்றி இருக்கும் இடங்களிலும் மரங்களை நடத்தொடங்கியுள்ளார். பெரிதாய் படிக்காத பிரபா தேவிக்கு 16 வயதில் திருமணம் நடந்துள்ளது. அதன்பின்னர் மரம் நடும் பழக்கத்தை அவர் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார். அதன் பிரதிபலனாக தற்போது இவரால் நடப்பட்ட 500 செடிகள் மரங்களாய் மாறி ஒரு வனப்பகுதியாக ஆகி இருக்கிறது. மரங்களின் மீது உயிரையே வைத்திருக்கும் இவரை, அந்த கிராம மக்கள் ‘மரங்களின் தோழி’ என்றே அழைக்கின்றனர்.