Power cut pt desk
இந்தியா

கர்நாடகா: மின்துறை அமைச்சர் கூட்டத்திலேயே மின்வெட்டு; “என்னதான் நடக்கிறது?” டென்சன் ஆன அமைச்சர்

கர்நாடக மின்துறை அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டதால் மின் துறை ஊழியர்களை கண்டித்த கோலார் மாவட்டத்தின் ஆட்சியர்.

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு கோலார் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில், மின் வெட்டு உள்ளிட்ட மின்சார பிரச்னை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், கர்நாடக மாநில மின் துறை அமைச்சர் ஜார்ஜ் பங்கேற்று மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கூட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே திடீரென மின் வெட்டு ஏற்பட்டது.

Karnataka EB Ministe

இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அவசரமாக சென்று சரி செய்தபின் மின் இணைப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மின் துறை அமைச்சர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மீண்டும் மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சரி செய்து, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் மின் வெட்டு ஏற்பட்டது.

இந்நிலையில், அங்கிருந்த ஜெனரேட்டரும் செயல்படாததால் ஆத்திரமடைந்த அமைச்சர், “என்னதான் நடக்கிறது இங்கு? வேண்டுமென்றே செய்கிறீர்களா?” என்று அதிகாரிகளை கண்டித்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர் பேசிய போது, “மின் துறை அமைச்சர் நடத்திய கூட்டத்திலேயே அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டது என்று ஊடகங்களில் செய்தி வெளிவரும். மின் தட்டுப்பாட்டால், இந்த பிரச்னை ஏற்படவில்லை. வேறு பிரச்னையால், மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

Power cut

இது குறித்து, அறிக்கை கேட்டுள்ளேன். நாங்கள் சமாளித்து கொள்கிறோம். ஊடகத்தினரும் சற்று சமாளித்துக் கொள்ளுங்கள்” என்று பேசினார். அமைச்சர் கிளம்பியதும், மின் துறை ஊழியர்களை, கோலார் மாவட்டத்தின் ஆட்சியர் அக்ரம் பாஷா கடுமையாக கண்டித்தார்.