உ.பி முகநூல்
இந்தியா

உ.பி | 500 ரூபாய் லஞ்சம் தர மறுப்பு... பாஸ்போர்ட் பக்கத்தை கிழித்தெறிந்த தபால்காரர்!

உத்தரப்பிரதேசத்தில், 500 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்த நபரின் பாஸ்போர்ட்டின் பிராதன பக்கத்தையே தபால்காரர் ஒருவர் கிழித்தெறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேசத்தில் 500 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்த நபரின் பாஸ்போர்ட்டின் பிராதன பக்கத்தையே தபால்காரர் ஒருவர் கிழித்தெறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் லக்னோவை சேர்ந்த ஒருவருக்கு கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி, தபாலில் பாஸ்போர்ட் வந்துள்ளது. அதை பெற்றுக்கொள்ள தபால் நிலையத்திற்கு தனது நண்பருடன் சென்ற அந்நபர், தபால்காரரிடத்தில் பாஸ்போர்ட் குறித்து கேட்டுள்ளார்.

பாஸ்போர்ட் வேண்டுமென்றால், ரூ 500 லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்றும், அப்பொழுதுதான் அதை கொடுப்பேன் என்றும் அந்த தபால்காரர் கூறியுள்ளார். இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர், ‘லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றம்’ எனக்கூறி பணத்தை தர மறுத்துள்ளார். இதையடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அதில் ஒரு கட்டத்தில், கோபம் கொண்ட அந்த தபால்காரர், பாஸ்போர்ட்டில் இருந்த முக்கியப் பக்கத்தை கிழித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட நபர், தபால்காரரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்டவருடன் சென்றிருந்தவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட நிலையில், தற்போது இது பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். வீடியோ ஆதாரங்களைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையில், ஊரில் தபால் வரும்போது அதை ஒவ்வொருக்கும் தர இதே தபால்காரர் ரூ 100 லஞ்சம் வாங்கியுள்ளார் என்பதையும் ஊர்மக்கள் குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.