சபாநாயகர் pt web
இந்தியா

ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்: சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் இருவரின் வியக்கவைக்கும் பின்னணி

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது... இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மீண்டும் ஓம் பிர்லாவும், காங்கிரஸ் சார்பில் பட்டியலினத்தை சேர்ந்தவரான கொடிக்குன்னில் சுரேஷூம் களமிறக்கப்பட்டுள்ளனர்.

PT WEB

மக்களவை சபாநாயகர்

மக்களவையை சுமுகமாக வழிநடத்திச் செல்ல, அரசு கொண்டு வரும் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, எதிர்க்கட்சிகளின் குரல்களை கேட்டு, அதற்கேற்றபடி முடிவுகளை மேற்கொள்வது தான் சபாநாயகருக்கான அதிகாரம்...

சபாநாயகர்

இத்தனை அதிகாரம் மிக்க பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் ஓம் பிர்லாவின் பெயரையே பரிந்துரை செய்திருக்கிறது. எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அவரை தேர்வு செய்ய வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது தேசிய ஜனநாயக கூட்டணி...

அதே நேரம் பதிலுக்கு துணை சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்கினால் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் எம்.பியான ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்... இதற்கு ஆளும் தரப்பில் இருந்து உரிய பதில் அளிக்கப்படாததால் நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் பதவிக்கு முதல் முறையாக போட்டி ஏற்பட்டுள்ளது.

இதில் சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லாவே தேர்ந்தெடுக்கப்படுவற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், எதிர்க்கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்த கொடிக்குன்னில் சுரேஷை களமிறக்கி இருக்கிறது...

ஓம் பிர்லா

சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் இருவரின் பின்னணியும் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஓம் பிர்லா மாணவ பருவத்திலேயே பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டவர். கோட்டா மாவட்ட பாரதிய ஜனதாவின் இளைஞர் அணி தலைவராகவும், பின்னர் அதன் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் ஓம் பிர்லா... 1997 முதல் 2003 ஆம் ஆண்டு வரை பாஜகவின் இளைஞர் அணி தேசிய துணைத் தலைவராகவும் பதவி வகித்த ஓம் பிர்லா, முதல் முறையாக கோட்டா தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏ பதவி வகித்த ஓம் பிர்லா கடந்த 2019 ஆம் ஆண்டு கோட்டா மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். தற்போது இரண்டாவது முறையாகவும் அதே தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்வாகி இருக்கிறார் ஓம் பிர்லா.

கடந்த 2019 ஆம் ஆண்டு 17 ஆவது மக்களவையின் சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அந்த பதவிக்கு வந்த முதல் எம்.பி., என்ற பெருமையையும் பெற்றார். மென்மையாக பேசும் சுபாவம் கொண்ட ஓம் பிர்லா, அப்போது சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால், மக்களவையில் சபாநாயகருக்கான பணியை சிறப்பாக செய்து பாராட்டுதலையும் பெற்றார். இதனை மனதில் கொண்டே 18 ஆவது மக்களவைக்கும் அவரையே சபாநாயகராக்க முடிவு செய்திருக்கிறது பாஜக.

பர்த்ருஹரி மஹதாப்

எட்டு முறை மக்களவைக்கு தேர்வான கொடிக்குன்னில் சுரேஷை தற்காலிக இடைக்கால சபாநாயகராக நியமிக்காமல், பிஜூ ஜனதா தளத்தில் இருந்து அண்மையில் பாஜகவுக்கு மாறிய மஹ்தாபுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது எதிர்க்கட்சியினரை வெகுவாகவே அதிருப்தி அடைய வைத்திருந்தது... சபாநாயகர் தேர்வின்போதும் அதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே கொடிக்குன்னில் சுரேஷை அந்தப் பதவிக்காக போட்டியிட வைத்திருக்கிறது காங்கிரஸ்...

கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக இருக்கும் கொடிக்குன்னில் சுரேஷ், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய இணையமைச்சராகவும் பதவி வகித்து இருக்கிறார். 18 ஆவது மக்களவைக்கு கேரளாவின் மாவேலிக்கரா தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கும் கொடிக்குன்னில் சுரேஷின் பூர்வீகம் திருவனந்தபுரம்..

கொடிக்குன்னில் சுரேஷ்

முதல் முறையாக 1989 ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்வான கொடிக்குன்னில் சுரேஷ், 1991, 1996, 1999ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் அடூர் தொகுதியில் இருந்து போட்டியிட்டு நான்கு முறை தொடர்ச்சியாக எம்.பி.யானார். இரு முறை மக்களவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த போதிலும் 2009 ஆம் ஆண்டு முதல் மாவேலிக்காரவில் போட்டியிட்டு 8 ஆவது முறையாக எம்.பி.,யாகி இருக்கிறார்... இதில், 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது அவர் அளித்த சாதி சான்றிதழ் போலியானது என்றும், அவர் கிறிஸ்தவர் என்றும் கூறி, கேரள உயர் நீதிமன்றம் கொடிக்குன்னில் சுரேஷின் வெற்றியை செல்லாது என அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது... ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பை நிறுத்தி வைத்து அவரது வெற்றி செல்லும் என உத்தரவிட்டிருந்தது..