பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதி செய்வதாக அமலாக்கத் துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் பயங்கரவாத செயல்களுக்காக 120 கோடி ரூபாய் வரை நிதி திரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்த்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அதேபோல் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் சோதனை மேற்கொண்டது. இதில் பாப்புலர் ஃபிரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கேரளாவில் கைதான ஷஃபீக் பயேத் என்பவரிடம் அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் இது தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல பாப்புலர் ஃபிரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சதித் திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயங்கரவாத செயல்களுக்கு ஆட்களை சேர்த்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை சேகரித்து உத்தரப் பிரதேசத்தில் பதற்றமான இடங்களிலும், முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.