இந்தியா

'சொந்த செலவில் 16 குளங்கள்' - உயிரினங்களின் தாகம் தீர்க்கும் விவசாயி!

'சொந்த செலவில் 16 குளங்கள்' - உயிரினங்களின் தாகம் தீர்க்கும் விவசாயி!

webteam

நாம் நினைப்பதை எல்லாம் சாதித்து மகிழ்ச்சி அடைவது ஒருதரப்பு. மற்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை விதைக்கவைத்து அதன் மூலம் மகிழ்ச்சி அடைபவர்கள் ஒருரகம். இந்த இருவேறுப்பட்ட மக்களால் சுழன்றுக்கொண்டிருக்கிறது இந்த பூமி. அதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்தான் கல்மனே கேம்கவுடா. 72 வயதான இந்த முதியவரின் செல்லப்பெயர் 'குளத்து மனிதன்'.

கர்நாடக மாநிலம் மேற்கு பெங்களூரு பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் வனவிலங்குகளுக்காக இந்த 'குளத்து மனிதன்' 16க்கும் அதிகமான குளங்களை வெட்டி உருவாக்கியுள்ளார். இவர் வெட்டிய குளத்தால்தான் வனவிலங்குகளும் பறவைகளும் இன்று தாகத்தை தணித்துக்கொள்கின்றன என்றால் அது மறுப்பதற்கில்லை. வன உயிரினங்கள் மட்டுமல்லாது மலைப்பகுதி கிராம மக்களும் அந்த நீர்நிலைகளால் பயனடைந்து வருகின்றனர்.

குளம் வெட்டும் அளவுக்கு குளத்து மனிதனிடம் வசதி இல்லை. ஆடுகளை மேய்த்து அதன் மூலம் சம்பாதிக்கும் பணத்தை சேமித்தே இந்த சேவையை செய்துள்ளார் இந்த மாமனிதர். சிறிய வீட்டில், நிறைய ஆடுகளுடன் வசித்து வரும் குளத்து மனிதனுக்கு அவரது மகனும் ஆதரவாக இருக்கிறார். இருவரும் இந்த சேவைக்காக இதுவரை ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்துள்ளனர்.

தன்னுடைய சேவை குறித்து பேசிய குளத்து மனிதன், ''கிராமமக்கள் பலரும் என்னை நினைத்து பெருமைப்படுகிறார்கள். ஆனால் என் மீது பொறாமை கொண்டவர்களும் உண்டு. நான் மக்களிடத்தில் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான், துணி துவைப்பது போன்ற வேலைகளால் குளத்தை மாசுப்படுத்த வேண்டாம். இந்த தண்ணீர் வாழ்வாதாரத்துக்கானது'' என்றார்.

குளத்து மனிதனின் சேவையை கர்நாடக அரசும், மத்திய அரசும் பாராட்டியுள்ளன. இவருக்கு விருது கொடுத்து சிறப்பித்துள்ளது கர்நாடகா. குளத்து மனிதனின் சேவைகுறித்து பேசிய பிரதமர் மோடி, ஒரு விவசாயி, மாமனிதராக மாறியுள்ளார். அவர் கட்டிய குளங்கள் மிகப் பெரியதாக இருக்காது. ஆனால் அதற்கு அவர் எடுத்துகொண்ட முயற்சிகள் மிகப் பெரியவை. அவர் வெட்டிய குளங்களால் அந்த இடங்களே தற்போது புத்துணர்ச்சி பெற்றுள்ளன என்றார். தாகம் தீர்க்கும் இந்த குளத்துமனிதனுக்கு தேசிய அளவில் விருது வழங்கி சிறப்பிக்க வேண்டுமென பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Source & photos: indiatimes