இந்தியா

“இந்திய அரசியல் கட்சிகளை மக்கள் அதிகம் நம்புவதில்லை” - கருத்துகணிப்பு

“இந்திய அரசியல் கட்சிகளை மக்கள் அதிகம் நம்புவதில்லை” - கருத்துகணிப்பு

webteam

இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளை மக்கள் அதிகம் நம்புவதில்லை என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இன்னும் சில வாரங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம் தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில் அசிம் பிரம்ஜி பல்கலைக்கழகம் மற்றும் லோக்நிதி என்ற அமைப்பும் மக்களிடம் கருத்துகணிப்பு நடத்தியுள்ளது. இது அசாம், ஜம்மு-காஷ்மீர், கேரளா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரகண்ட், திரிபுரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட 12 மாநிலங்களிலுள்ள மக்களிடம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்துகணிப்பின் முடிவில் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.

மேற்கூறிய மாநிலங்களிலுள்ள மக்கள் அரசியல் கட்சிகளை அதிகம் நம்புவதில்லை என்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர். மொத்தம் மைனஸ் 55 சதவீதம் மக்கள் அதிருப்தியை பதிய வைத்துள்ளனர். இந்திய ராணுவம்தான் மக்கள் அதிகம் நம்பும் அமைப்பாக உள்ளது. அதன்மீது மக்கள் 88% நம்பிக்கை வைத்துள்ளனர். அதேபோல நீதிமன்றங்களின் மீது மக்கள் 60% நம்பிக்கை வைத்திருப்பது கருத்துகணிப்பில் தெரியவருகிறது.

இந்தியா எதிர்கொண்டு வரும் மிகப் பெரிய பிரச்னை எது என்ற கேள்விக்கு 20% மக்கள் வேலையின்மையே என்று பதிலளித்துள்ளனர். அத்துடன் வளர்ச்சி மற்றும் வறுமை தான் முக்கிய பிரச்னை என்று 15% பேர் தெரிவித்துள்ளனர். நிர்வாகம் மற்றும் ஊழல் முக்கிய பிரச்னை என்று 13% பேர் பதில் கூறியுள்ளனர். மேலும் நாட்டிலுள்ள செல்வந்தர்களே இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாகவுள்ளனர் என்று இந்த ஆய்வில் மக்கள் தெரிவித்துள்ளனர்.