யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நாள் ஒன்றுக்கு சுமார் 2000 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினந்தோறும் சராசரியாக 20-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். கடந்த சில வாரங்களாகவே அத்தியாவசிய கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் அரசின் உத்தரவுக்கு இணங்க கதவடைக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தை போலவே அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொற்று பாதிப்பு குறையவில்லை.
இந்நிலையில், அண்மையில் முடிந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களது மக்கள் பணியை தொடங்கமலே உள்ளனர். அதற்கு முதல் காரணம், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று. பதவியேற்றுக் கொண்ட சில நாட்களில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் புதுச்சேரிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நிலவும் அரசியல் அசாதாரண சூழல்!
நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் கட்சி (என்.ஆர்.காங்கிரஸ்), பாஜக மற்றும் அதிமுக மாதிரியான கட்சிகள் ஓர் அணியாக திரண்டு 2021 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. திமுக 6 தொகுதிகளிலும், சுயேட்சையாக போட்டியிட்டவர்கள் 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதனால் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. இருப்பினும் முதல்வரை தவிர வேறு யாரும் பதவி ஏற்றுக் கொள்ளாமல் உள்ளனர்.
இந்தச் சூழலில் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாக நியமித்தது மத்திய அரசு. நியமிக்கபட்ட மூவரும் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள். யூனியன் பிரதேச அரசாங்க சட்டம் 1963, பிரிவு 3, உட்பிரிவு 3 இன் படி மத்திய அரசு நேரடியாக புதுச்சேரி சட்டப்பேரவைக்கான மூன்று நியமன எம்.எல்.ஏக்களை நியமிப்பதாக இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணையில் தெரிவித்தது. அது மறுநாள் காலையே புதுச்சேரி அரசிதழிலும் வெளியாகி இருந்தது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நியமன உறுப்பினர் பதவி கூட ஒதுக்கப்படாதது சார்ந்தவர்களின் முகம் வாட செய்தது.
இதனைச் சுட்டிக்காட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் ஆகியோர் பாஜகவை விமர்சித்திருந்தனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் முதல்வரை தவிர யாருமே பதவிப் பிரமாணம் செய்து கொள்ளாத சூழலில், பாஜக நேரடியாக நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 3 நியமன எம்எல்ஏக்களுக்கும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவும், பட்ஜெட் ஆகியவற்றில் வாக்களிக்கவும் உரிமை உள்ளது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது, இந்தக் கேள்வி எழ முக்கிய காரணம்.
கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை ஓரம் கட்டும் பணியை பாஜக மேற்கொள்கிறதா என்ற சந்தேகமும் எழுந்திருந்தது. அதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருத்துகளும் பரவின.
“தேசிய ஜனநாயக கூட்டணியில் ரங்கசாமிதான் முதல்வர். அதில் எந்த மாற்றமும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி புதுச்சேரியில் 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தரும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சிகள் பரப்பி வரும் வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” என பாஜகவின் காமராஜர் நகர் எம்.எல்.ஏ ஜான்குமார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி நல்லபடியாக தொடருவதாக கூட்டாக இணைந்து தெரிவித்திருந்தனர் அந்த கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள். அது இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தற்போது புதுச்சேரியை சார்ந்தவர்கள் முதல்வர் ரங்கசாமியின் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, கூட்டணிக்குள் நிலவும் சங்கடங்களை களைவது என கலந்து கட்டி அவர் பணியாற்ற வேண்டி உள்ளது.
மக்கள் கொரோனாவுடன் மல்லுக்கட்டி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் இந்தப் போக்கு ரசிக்கும்படியாக இல்லை என புதுச்சேரியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தங்களது கருத்தை முன்வைக்கின்றனர்.
- எல்லுச்சாமி கார்த்திக்