நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள் என்பதால் இறுதிக்கட்ட பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 649 பேரூராட்சிகள் ஆகியவற்றில் மொத்தம் 12,838 வார்டுகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இவற்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடந்த சில நாட்களாக வெளியிட்டு வருகின்றன. நேற்று வரை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட 6,477 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நகராட்சிகளில் 11,663 வேட்புமனுக்களும், பேரூராட்சிகளில் 19,378 வேட்புமனுக்களும் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தமாக 37,518 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இன்று கடைசிநாள் என்பதால் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 699 மூத்த அதிகாரிகளை வட்டார பார்வையாளர்களாக நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: சீனா குளிர்கால ஒலிம்பிக் - தூதரக ரீதியாக புறக்கணித்தது இந்தியா