அரவிந்த் கெஜ்ரிவால், செந்தில் பாலாஜி, ஹேமந்த் சோரன், கவிதா, மணீஷ் சிசோடியா pt web
இந்தியா

கெஜ்ரிவால் முதல் செந்தில் பாலாஜி வரை.. ஜாமீனில் வெளிவந்த தலைவர்கள் யார் யார்?

Angeshwar G

“ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்க புலனாய்வுத் துறையை பயன்படுத்துகிறது” இதுதான் ஓரிரு வருடங்களாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. காரணம், ஒரு சில மாநிலங்களில் சில முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தொடர்ச்சியாக அவர்களின் வழக்கு இழுக்கப்பட்டே வந்தது. தற்போதும்கூட பல வழக்குகள் முடிவுக்கு வரவில்லை. இருப்பினும் அந்த தலைவர்கள் பிணை வாங்கி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்படி யார் யார் கைது செய்யப்பட்டார்கள்? எத்தனை நாட்கள் சிறையில் இருந்தார்கள்? பிணையில் எப்போது வந்தார்கள்? இங்கே விரிவாக பார்க்கலாம்....

மணீஷ் சிசோடியா

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். விசாரணை நீதிமன்றங்கள் ஜாமீன் மனுக்களை நிராகரித்ததை அடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு சென்றார். உயர்நீதிமன்றமும் நிராகரித்தது. பின் உச்சநீதிமன்றத்தை நாடினார்.

கடந்த ஜூலை 16 ஆம் தேதி, சிசோடியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனீஷ் சிசோடியா 16 மாதங்களாக சிறையில் இருப்பதாகவும், 2023 அக்டோபரில் இருந்த நிலையைத் தாண்டி விசாரணை முன்னேறவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

மணீஷ் சிசோடியா,

முடிவாக, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து கிட்டத்தட்ட 17 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து அவர் வெளியே வந்திருந்தார். அப்போது கருத்து கூறியிருந்த நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அமர்வு, “விசாரணை விரைவில் முடிவடையும் வாய்ப்புகள் கூட இல்லையென்பது தெளிவாகிறது” என கூறியிருந்தது. இதற்கு இடையே அவரது ஜாமீன் மனு வெவ்வேறு நீதிமன்றங்களால் 7 முறை நிராகரிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் கெஜ்ரிவால்

மதுபான கொள்கை முறைக்கேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் அனுப்பப்பட்ட 9 சம்மன்களை சட்டவிரோதமானது என முத்திரை குத்தி அவர் தவிர்த்த நிலையில், அவரது கைதுப்படலம் நிகழ்ந்தது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவரைக் கைது செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பாஜக, பகிரங்க மிரட்டல் விடுப்பதாகவே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

அரவிந்த் கெஜ்ரிவால்

ஆனால், தேர்தல் நெருங்கிய சமயத்தில், அதாவது மே 10 ஆம் தேதி, இறுதிக்கட்ட வாக்குப்பதிவை ஒட்டி கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 ஆம் தேதிவரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜூன் 1 ஆம் தேதி மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜூன் 12 ஆம் தேதி அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கிடைத்தது. சிபிஐ வழக்கில் சிறையிலேயே இருந்தார். செப்டம்பர் 13 ஆம் தேதி சிபிஐ வழக்கிலும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. ஐந்து மாதங்கள் சிறைவாசத்துக்குப் பின் கெஜ்ரிவால் வெளியே வந்தார். இந்த வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கவிதா

டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஹைதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவருக்கு கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. இதனை அடுத்து கவிதா 165 நாட்களுக்குப் பிறகு டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்திருந்தார்

ஹேமந்த் சோரன்

போலி ஆவணங்கள் மூலமாக கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தினார் என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31ஆம் தேதி அவரை கைது செய்தது. பிறகு அவர் ஜார்க்கண்ட்மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை அடுத்து ஜார்க்கண்ட் மாநில புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் பொறுப்பேற்றார். இதன்காரணமாக பிப்ரவரி 5 ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

ஹேமந்த் சோரன்

ஏப்ரல் 27 ஆம் தேதி தனது உறவினர் இறுதிச்சடங்கில் பங்கேற்க 13 நாட்கள் இடைக்கால ஜாமின் கோரிய மனுவை ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முடிவாக, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து கடந்த ஜூன் 28ஆம் தேதி அவர் சிறையில் இருந்து வெளியே வந்திருந்தார். சரியாக 150 நாட்கள் கழித்து ஹேமந்த் சோரன் சிறையிலிருந்து வெளியே வந்திருந்தார்

செந்தில்பாலாஜி

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜி பிணை கேட்டு தொடர்ச்சியாக தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கு விசாரணையின் போது, 13 மாதங்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், விசாரணை எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை என அவர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் அமலாக்கத்துறை , செந்தில் பாலாஜி தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.

செந்தில் பாலாஜி

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு நேற்று நிபந்தனையுடன் பிணை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. “வழக்கு விசாரணை நிறைவடைய நீண்ட காலமாகும், நீண்ட நாட்களாக ஒருவரை விசாரணை என்ற பெயரில் சிறையில் தொடர்ந்து வைத்திருக்க முடியாது” என்ற காரணங்களுக்காக அவருக்கு பிணை வழங்கியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 50க்கும் அதிகமான முறை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதியாக பிணை வழங்கப்பட்டுள்ளது.