இந்தியா

``போராளிகள் விதைக்கப்படுகிறார்கள்`` - ஸ்டான் சுவாமி மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்

``போராளிகள் விதைக்கப்படுகிறார்கள்`` - ஸ்டான் சுவாமி மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்

webteam

சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திருச்சியைச் சேர்ந்த ஸ்டான் சுவாமி ஜார்க்கண்டில் பழங்குடியினர் நலனுக்காக குரல் கொடுத்தார். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டதாகக்கூறி கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஸ்டான் சுவாமி.

எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த ஸ்டான் சுவாமிக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டான் சுவாமி உடல்நலக்குறைவால் காலமானார்.

ஸ்டான்சுவாமி மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “போராளிகள் விதைக்கப்படுகிறார்கள்; புதைக்கப்படுவதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்டான் சுவாமியின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரை பின் தொடர்பவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். நீதி, உண்மை மற்றும் மனிதநேயம் மேலோங்கட்டும்” எனத் தெரிவித்துள்ளது.

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் “ஸ்டான் சுவாமி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதை நான் கடுமையாக எதிர்த்தேன். அவரது மரணத்திற்கு வழிவகுக்கும் முழுமையான அக்கறையின்மை மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சேவைகளை வழங்காததற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்டான் சுவாமி காலமானதற்கு மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நீதி மற்றும் மனிதாபிமானத்திற்கு தகுதியானவர்” எனத் தெரிவித்தார்.