நரேந்திர தாமோதர் தாஸ் மோடி புதிய தலைமுறை
இந்தியா

விமர்சனங்களை புறந்தள்ளி மீண்டும் அரியணை| 1970- 2024.. நரேந்திர தாமோதரதாஸ் மோடியின் அரசியல் பயணம்!

பிரதமர் பதவியில் 3ஆவது முறையாக அமர்கிறார் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி. அவரது அரசியல் வாழ்க்கை குறித்த ஓர் அலசல்.

PT WEB

பிரதமர் பதவியில் 3ஆவது முறையாக அமர்கிறார் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி. அவரது அரசியல் வாழ்க்கை குறித்த ஓர் அலசல்.

பூகம்பங்கள் என்றாலே பேரழிவுக்கு வித்திடும் இயற்கை நிகழ்வு...ஆனால் ஒரு பூகம்பம் பிரமாண்டமான எழுச்சிக்கு பாதை அமைத்தது என்றால் கேட்க ஆச்சரியமாக இருக்கும். ஆம். 2 ஆயிரமாவது ஆண்டில் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் பல ஆயிரம் உயிர்கள் பலியாக காரணமாகி இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிர்வாக பின்னடைவுகள் என அப்போதைய மாநில பாஜக அரசின் மீதான அதிருப்திகளை அதிகரித்தது. இதையடுத்து நிலைமையை சமாளிக்க முதலமைச்சராக நியமிக்கப்பட்டவர்தான் நரேந்திர மோடி.

அரசியலில் 1970களில் இருந்து சுற்றிச்சுழன்ற மோடி 2001ம் ஆண்டில் ஆட்சி பீடத்தில் முதன் முதலாக அமர்ந்தார். தேர்தலுக்கு 12 ஆயிரம் மணி நேரமே இன்னும் இருக்கிறது என இலக்கு நிர்ணயித்து தொண்டர்கள், நிர்வாகிகளை உத்வேகப்படுத்தி 2003ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சிக்கட்டிலில் பாஜகவை அமர்த்தினார் மோடி.

அரை நூற்றாண்டாக காங்கிரஸ் கோட்டையாக இருந்த காந்தி பிறந்த மண் இதன் பின் பாஜகவின் கோட்டையாக மாறியது. மாநிலத்தில் இவர் மேற்கொண்ட வளர்ச்சிப்பணிகள் குஜராத் மாடல் என்ற பெயரில் நாடெங்கும் புகழ் பெற்றன. எனினும் இது திட்டமிடப்பட்டு பரப்பப்பட்ட விளம்பர நடவடிக்கை என கூறுகிறார் சமூகவியலாளர் ஆனந்த் டெல்தும்டே.

குஜராத்தை வசப்படுத்திய மோடி அடுத்த சில ஆண்டுகளிலேயே டெல்லி அரியணையை குறிவைத்துவிட்டார். இதற்கான நகர்வுகளை மேற்கொண்ட மோடி 2013ஆம் ஆண்டு பாஜக பரப்புரைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டு 2014இல் பாஜகவின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். இதன் பின் 2014,2019,2024 என தொடர்ந்து மும்முறை ஹாட்ரிக் வெற்றியை பெற்றது பாஜக.

மோடி என்ற நேர்த்தியாக திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்ட பிம்பமே இந்த தொடர் வெற்றிகளுக்கு காரணம் என்கிறார் பிரபல சமூகவியல் அறிஞர் மிலன் வைஷ்ணவ். பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள், அதிரடியாக திருத்தப்பட்ட சட்டங்கள் என மோடி அரசின் நகர்வுகள் பெரும் விமர்சனங்களையும் சந்தித்தன. வெறுப்பு பேச்சுகளால் மக்களிடையே பிளவிற்கு வழிவகுத்தார் என்றெல்லாம் கடும் புகார்கள் கூறப்பட்டன. ஆனால் விமர்சனங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளி மீண்டும் அரியணை ஏறுகிறார் மோடி.

இந்திய அரசியலில் பாஜக என்ற கட்சியை தாண்டி மோடி என்ற பிம்பம் வலுவான ஒன்றாக உருப்பெற்றுள்ளது. ஒற்றை ஆட்சி முறையை நோக்கி நாடு மெல்ல நகர்கிறதா என சிலர் ஊகங்களை முன்வைக்கும் நிலையில் இந்தியாவின் விளாடிமிர் புடின் ஆகிறாரா மோடி என்ற கேள்வியை எழுப்புகிறார் பிரபல எழுத்தாளர் வில்லியம் டால்ரிம்பிள்.

இந்நிலையில் இந்தியா கூட்டணி தந்த கடும் சவாலை சமாளித்து மீண்டும் வென்றுள்ளார் மோடி. ஒரே நாடு ஒரே தேர்தல்..பொது சிவில் சட்டம் என பல முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள்...கூடுதல் வலிமையுடன் எதிர்க்கட்சிகள் என பிரதமர் நாற்காலியில் மீண்டும் அமரும் மோடியின் 3ஆவது பதவிக்காலம் எப்படி இருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி....